பெண்கள் நாட்டின் கண்கள்

முன்னுரை :
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற நாமக்கல் கவியின் கூற்று முற்றிலும் உண்மையானது. எந்த நாடு அல்லது சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களோ அந்த சமூகமே சிறந்த சமூகமாகும். உலகில் மனிதர்கள் அனைவரையும் தனித்தனியாக தன்னால் கவனிக்க முடியாது என்பதால் தான் இறைவன் பெண்ணை படைத்தான் என்பார்கள். உண்மைதான்… அதை மெய்ப்பிக்கும் வகையில் தாய்மொழி, தாய்நாடு, கங்கை, காவிரித்தாய் என்று பெண்களை தாயாக பாவிக்கும் சமூகம் நமது பாரத சமூகமாகும்.

சங்ககால பெண்கள் : 
சங்க காலத்தில் அவ்வை, மாசாத்தியார், பொன்முடியார், கங்கை பாடினியார், பாரி மகளிர் என்றும் 30-க்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் ஆணுக்கு சமமாக கல்வி கற்று சமூகத்தில் உயர்நிலையில் இருந்துள்ளதை அறிகிறபோது ஆணுக்கு சமமாக பெண்கள் நடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது உறுதியானது. ஆனால் இடைக்காலத்தில் அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? பேதமை என்பது மாதர்க்கு அணிகலன் என்று கூறி அடிமையும், கொடுமையும் செய்யப்பட்டனர்.

பெரியார், திரு.வி.க, பாரதி, முத்துலெட்சுமி, அம்பேத்கார், தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் பெண்அடிமைத் தனத்தை உடைத்தெறிந்தனர். குடத்திலிட்ட விளக்குகளாய் இருந்த பெண்களை குன்றிலிட்ட விளக்காய் ஒளிர செய்தனர். அவர்களின் சீரிய முயற்சியால் பெண்கள் தங்களின் சுய சக்தியை உணர்ந்து முன்னேற ஆரம்பித்தனர்.

தியாகத்தின் மறு உருவம் : 
தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்று பன்முக பரிணாமம் பெறும் பெண்கள் தியாகத்தின் மறு உருவமாக திகழ்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றக்கூடியது மட்டுமல்ல, வணங்கத்தக்கதும் ஆகும். அதனாலேயே பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் ஆதாரமாகிய நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி அழைக்கிறோம். உலகத்திலேயே மிகவும் போற்றத்தக்கதாக தாய்மையை வைத்திருக்கிறோம். அவர்களின் தியாகத்திற்கும், உழைப்பிற்கும் கைமாறு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பெண்கள் படும் இன்னல்கள் :
இத்தகைய புகழ்வாய்ந்த பெண்கள் பல இன்னல்களையும் சந்திக்கத்தான் செய்கின்றனர். வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை போன்றவை இந்த நூற்றாண்டிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. வரதட்சணையின் தாக்கத்தால் முதிர்கன்னிகளாக வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம். அவர்களின் துயர்களை போக்க மத்திய, மாநில அரசுகளும் வரதட்சணை தடைச்சட்டம், பாலியல் கொடுமைகள் தடைச்சட்டம், பெண் கல்வி சட்டம், சொத்துரிமை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியுள்ளது.

இந்த சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது. பயன்பாட்டுக்கு வரவேண்டும். இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் வரதட்சணை இல்லாத திருமணங்களை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். “ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று கவிதை வரிகளில் சொல்லியவற்றை கவிதையோடு நிறுத்திவிடாமல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் சமூகம் உயர்வானதொரு இடத்தை அடைய முடியும்.

சாதித்த பெண்கள் : 
ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி சாதிக்க பெண்களும் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஆண்டாள், அரசியலில் இந்திரா, அறிவியலில் கல்பனா சாவ்லா, மருத்துவத்தில் முத்துலெட்சுமி, கணிதத்தில் சகுந்தலா, சேவையில் அன்னை தெரசா, விளையாட்டில் பி.டி.உஷா, நீதித்துறையில் பாத்திமா பீவி, காவல்துறையில் கிரண்பேடி என்று இந்திய வரலாற்றில் கோலோச்சியவர்கள் ஏராளம். மேலும் பச்சேந்திரிபாய், அருந்ததிராய் போன்ற பெண்கள் பெண் இனத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தற்போது சுதந்திரம் பெற்று 60-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் தனது அயராத உழைப்பால், தன்னம்பிக்கையால் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்று இருக்கிறார் பிரதீபா பட்டீல்.

முடிவுரை : 
ஆகவே அனைத்துப் பெண்களும் ஆற்றல் படைத்தவர்களே, அவர்களின் ஆற்றல் வெளியுலகுக்கு தெரியாமலேயே அழிந்து போவதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அதற்கு காரணம் அவர்களின் கல்லாமையே. ஆகவே அனைத்துப் பெண்களும் கல்வி என்ற திட்டத்தை செம்மையாக செயல்படுத்த வேண்டும். பெண்கள் நாட்டின் கண்களாகும். அத்தகைய பெருமை வாய்ந்த பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாரதம் உலக அரங்கில் வீரு நடை போட முடியும்.

– P.அருண்பிரசாத், JKM 1051

பெண்களும், சட்டமும்

ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களை கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்ட திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது.

ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினர். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒருவழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக் கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப் படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? இங்கேதான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்த பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும், சட்டங்களும் பெரிதும் உதவின. பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரிமை உடையன என்று மனுநீதி கூறுகின்றது.

ஒரு ஆண் மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்தவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது.

சட்டமும் கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமை கலாச்சாரம் தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்கள் பெண்களுக்கு பெரிதும் எதிராகவே அமைகின்றன.

பெண் சிசு கொலை : 
வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக “பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம் – 1870 – ம் ஆண்டு” அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன.

கருகலைப்பு : 
1971-ம் ஆண்டு சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்கு மட்டுமே கருகலைப்பு செய்யலாம்.

  1. கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்போது. 
  2. பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்ற பாதிக்கப்படும்போது. 
  3. மருத்துவர் சரியயன்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ கருச்சிதைவு செய்யலாம். 

 இந்திய தண்டனைச் சட்டம் – 1860

ஆபாசப் புத்தகம், விளக்கப் படம், ஓவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன.

பிரிவு – 292 – இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

பிரிவு – 292 – குறைந்த அளவு தண்டனை ஆறுமாதச் சிறைக் காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்பட்டாமல் இருத்தல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

பிரிவு – 293 – 6 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு – 294 – 3 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்தது.

பெண்ணை அவமதித்தல் : 
பிரிவு – 354 – ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். தண்டனை – 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே.

கட்டாயத் திருமணம் : 
பிரிவு – 366 – ஒரு பெண்ணைப் பலாத்காரமாக அல்லது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தல் அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். தண்டனை – 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும்.

பிரிவு – 366 ஏ – பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை பிறருடன் கட்டாய உடல் உறவிற்கு உட்படுத்துவது அல்லது உட்படுத்தப்படுவது குற்றம். தண்டனை – 10 ஆண்டுகள் சிறைக்காவல், அபராதம்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் : 
பிரிவு – 373 – பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை எந்த வயதிலாவது விபச்சாரத்திற்கு அல்லது முறைகேடான உடலுறவு அல்லது வேறு சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்கு பெறுவதும், தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றம். தண்டனை : 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும். இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள்.

பலாத்காரம் : 
பலாத்காரம் என்றால் (1) அவளுடைய விருப்பத்திற்கு மாறாக (2) அவளுடைய சம்மதமின்றி (3) ஆணோ, பெண்ணோ, நெருக்கமான ஒருவருக்கு மரணம் (அல்லது) காயம், அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தை பெற்று (4) கணவன் இல்லையயன்று தெரிந்தபோதிலும் (5) சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக் கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் (6) புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும்போது.

பிரிவு 375 யை பயன்படுத்த வேண்டும்.

பிரிவு 376-ன் படி குறைந்தபட்சம் 7 வருடம் முதல் ஆயுள் சிறை தண்டனை அபராதமும்.

கீழே கொடுக்கப்பட்ட நபர்கள் :

(1) போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
(2) சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர் பலாத்காரம் செய்தல்.
(3) பெண்கள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி, தம் அதிகாரத்தை பயன்படுத்தி அங்குள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
(4) கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
(5) 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
(6) குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
இவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் முதல் ஆயுட்கால சிறை காவல் தண்டனை, அபராதமும்.


பிறர் மனை சேர்க்கை : 
பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவருடன் உடலுறவு கொள்வது பிறர் மனை சேர்க்கை என்ற குற்றமாகும்.
பிரிவு 467-ன்படி 5 ஆண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
இருதார மணம் :
இருதார மணம் என்றால் ஒரு கணவனோ, மனைவியோ முதல் திருமணம் சட்டப் பூர்வமானதாக உள்ளபோதே மறு திருமணம் செய்வது குற்றமாகும்.
பிரிவு 494-ன்படி 7 ஆண்டு சிறைக்காவல் தண்டனையும், அபராதமும்.
பிரிவு 498ஏ – இது 1983-ல் புகுத்தப்பட்ட பிரிவாகும்.
கணவர் (அல்லது) கணவரின் உறவினரால் கொடுமை குற்றமாகும். தண்டனை – 3 ஆண்டு சிறைக் காவல், அபராதம்.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் – பிரிவு 14 
இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும், சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர, அரசு மறுக்கக்கூடாது. பிரிவு-15 சமயம், சாதி, இனம், பால் பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும், எந்த குடி மகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது.

P.ஆலிஸ்மேரி, 
ஒருங்கிணைப்பாளர், திருவையாறு மண்டலம். 

உரிமை கீதம்…

பாரத தேசம்
பழம் பெரும் தேசம்…
ஆம்!
மொழியால் – இனத்தால்
நாம் வேறுபட்டாலும்
இந்தியன் என்ற உணர்வில்
அனைவரும் ஒரே இனம்…!
அதுதான் மானுட தத்துவம்…
ஆனால் ஏனோ…
இயற்கையின் நன்கொடை
‘நீரில்’ மட்டும் பிரிவினை…
கூட்டு குடிநீர் திட்டத்தில்
குறுக்கே நிற்கும் சதிகாரக் கூட்டம்…
உயிர் வாழ
பயிர் வளர
மண் மலர…
உன்னத ஆற்று நீர்
அனைவருக்கும் பொதுமை…
எனக்கு மட்டுமே
நீர் சொந்தம்
இது சுயநல போக்கின்
உச்சக் கட்டம்…
இது நம் தேச பக்திக்கு
வைக்கும் வேட்டு…
ஒட்டுக் கட்சிகள்
ஆட்சி பீடம் ஏற
திட்டமிடும்
அரசியல் தந்திரம்…
அன்பு சகோதரமே
நம்பி கெட்டது போதும்…
நம் தேச ஒற்றுமை நூலில்
ஒன்றாக இணைவோம்
நதி நீர் யாவும்
பொதுவுடைமை என
வீரமுழக்கமிடுவோம்
உரிமைக்கு போராடுவோம்…
பூமி பந்து
பொது என போற்றுவோம்


D.A.ஜார்ஜ், KMSSS

சிந்திக்க சில நிமிடம்

சுதந்திட நாட்டில்
சுவாசிக்கக் கூட சுதந்திரம் இல்லை
ஜனநாயக நாட்டில்
வசிப்பதர்கோர் இடமும் இல்லை
மக்களாட்சியில் ஓட்டு போட
உரிமை இல்லை
வாங்கியவன் (லஞ்சம்) வாங்கியவன் களினிலே
கேட்டவன் கேள்வி கேட்டவன்
ஏமாற்றும் பாரினிலே.

– பா. தேவா, மகளிர் திட்டம்.

விலைவாசி உயர்வு… விரக்தியில் மக்கள்…

அண்மைக் காலமாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது. இதனால் பாதிக்கப்படுவது கிராமப்புற ஏழை தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் தான். இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்ன?

1)வேளாண்மைத்துறை வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாக உள்ளது என மத்திய அரசின் புள்ளி விபரமே இதற்கு சான்றாக உள்ளது. 
2) விவசாய இடு பொருட்களின் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி விவசாயத் தொழிலை கைவிடும் சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 
3) குறைந்த அளவிலான பொருட்களே ரே­ன் கடைகளுக்கு பெயரளவில் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ரே­ன் கடைகளுக்கு சென்று வாங்கினால்தான் கிடைக்கும் நிலை உள்ளது. 
4) அத்தியாவசியப் பொருட்களின் ஆன்-லைன் வர்த்தகம் அமுலாக்கம். 
5) பதுக்கல் முறையினை கையாளும் வணிகர்கள். 
இவற்றினை களைய மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். இல்லையேல் ஏற்கெனவே அரை வயிற்று பட்டினியோடு அல்லல்படும் மக்கள் அழிந்து போய்விடும் சூழல் ஏற்படும். அழிவின் ஆபத்தில் உள்ள அம்மக்களின் கோபம் வாக்குச் சீட்டில் பிரதிபலிக்கும் நிலை ஏற்படலாம் என்பதையும் அரசுகள் மனதில் கொள்ள வேண்டும். 
– ‘அம்மு’ 

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

பல நிலைகளில் உள்ள அலுவலர்கள் எடுக்கும் முடிவுகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்காதது தான் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மக்களாட்சி மாண்பை இந்திய அரசு கொண்டிருந்த போதிலும் இதுவரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயக முறை அரசின் திட்டமிடல் செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பை தனிமைபடுத்தியே வந்துள்ளது. இதனால் மக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்புடையதாக செயல்பட வேண்டிய அரசு திசைமாறி பொறுப்பற்ற தன்மை கொண்டதாக வெளிப்படையற்ற செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டு மக்கள் விரோத அரசுகளாகவே நடைபெற்று வந்ததை / வருவதை காண முடிகிறது.
பல்லாண்டு காலமாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மை தேவை என்றும், மக்களுக்கு நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமையை பெற தகவல் பெறும் உரிமைச் சட்டம் தேவை என்பதை பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. மக்களால் மக்களைக் கொண்டு, மக்களுக்கான நடத்தப்படும் ஆட்சியே மக்களாட்சி. ஆனால் இந்த நாட்டு மக்களில் 50% பேருக்கு குடிக்க கஞ்சியில்லை. அதன் காரணம் என்ன என்பது அவர்களுக்கே தெரியாது.
பாரதி பாடினானே,
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம்

இல்லையேன்னும் அறிவுமில்லார்
அந்த நிலை இனிமேல் மாறும் நிலை ஏற்படும். அதற்கு காரணம் தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும். மக்கள் தங்களுக்கு உள்ள உரிமைகள், வாய்ப்புகள், சலுகைகள் என்னென்ன என்ற தகவல் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தின் பொது தேவைகளுக்கான உரிமைகள், தேவைகள் அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டங்கள், அத்திட்டங்களை நிறைவேற்ற வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி, அந்த நிதி செலவிடப்படும் விதம் அதற்கான மேற்பார்வை கண்காணிப்பு முறைகள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை மறுக்கப்படும் பொழுது அவற்றிற்காக குரல் கொடுப்பார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு சாலையையோ அல்லது பாலத்தையோ அமைக்கும் பணி சரியாக நடைபெறவில்லை என்றால் என்ன நடக்கும் என்றும் தெரிந்தும் அது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இப்பொழுது முடியும் தகவல் உரிமை சட்டத்தின் வழியாக. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தின் தேவையை பல
  நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்புகளில் சுட்டிக் காட்டிய பொழுதும் மத்திய அரசு இதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் மாநிலம் தமிழகம். 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் நாள் 1997-98-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டன. 1997-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் அச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை. காரணம் அச்சட்டம் 21 விதிவிலக்குகளை சுட்டிக் காட்டியது. 12 ­ரத்துகளை தெளிவாக வரையறை செய்யவில்லை. தனியார் அமைப்புகள் பற்றி குறிப்புகள் இல்லை. ஆனால் அச்சட்டம் அகில இந்திய அளவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வர வழிகாட்டியாக அமைந்தது.
2002-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திரு. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசால் தகவல் அறியும் சுதந்திர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அம் மசோதா சட்டமாகவில்லை. 2004-ல் புதிய அரசு (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதா தயாரானது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் பலவீனமானது. தேசிய ஆலோசனைக் குழு தலைவர் திருமதி. சோனியாகாந்தி தலையிட்டு தங்கள் குழு அளித்த 62 பரிந்துறைகளையும் அச்சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சட்ட முன்வடிவாக திரு. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 148 திருத்தங்களுடன் பரிந்துறை செய்தது. பிரதமரால் நியமிக்கப்பட்ட திரு. பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர் நிலைக்குழு ஆய்வு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2005 ஜுன் 15-ந் தேதி நிறைவேற்றப்பட்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
முதல் முறையாக ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாக கருதப்படும் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தையும் இந்த நாட்டின் குடிமக்கள் எல்லா துறைகளிலும் தகவல்கள் பெறலாம்.
இந்நாள் வரையில் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் தங்களுக்குள் மூடி வைத்திருந்தனர். ஆனால் இச்சட்டத்தின்படி குறித்த காலத்தில் தகவல் தர மறுத்தாலோ அல்லது தவறான தகவலை அளித்தாலோ அல்லது குறைவான ஆவணங்களையோ, தவறாக திசை திருப்பும் அதிகாரிக்கு றீeஉமிrஷ்லிஐ 7(1)-ன்படி ஒரு நாளைக்கு ரூ. 250/- முதல் ரூ. 25,000/- வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
எடுத்துக்காட்டாக தங்களுக்கு வழங்கப்பட்ட ரே­ன் எவ்வளவு ஒரு திட்டத்திற்கு செலவிட்ட தொகை எவ்வளவு என்றும் விவசாயிகள் தங்களுக்கு அரசு அளிக்கும் இலவச
திட்டம், மான்யம் எவ்வளவு, அதிகாரிகள் செலவிட்ட தொகை எவ்வளவு என்றும் கேட்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் பெற முடியாதது :
இச்சட்டம் Section (24)4-ன்படி மத்திய மாநில அரசால்
அறிவிக்கப்பட்ட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பொருந்தாது.
நீதித்துறையால் தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகள்.
தகவல் வெறியிடுவதால் மக்கள் சபை மற்றும் மாநில சட்டசபைகளில் உரிமை
மற்றும் தனி சுதந்திரத்தை பறித்தல்.
வாணிக ரகசிய தகவல்கள், வாணிக ரகசியங்கள் அல்லது ரகசிய சொத்துக்கள்,
ஜம்மு காஷ்மீர் அரசை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.
தமிழக நிலை :
மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் தனியாக தகவல் உரிமைச் சட்டம் இயற்ற தடை ஏதுமில்லை. தமிழக அரசு சட்டம் ஏதும் இயற்றவில்லை. மத்திய அரசின் விதி விலக்கு பல இருக்கிறது. மேலும் தமிழக அரசு 33 விதி விலக்குகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு அந்தந்த துறை அதிகாரிகளை தகவல் அதிகாரிகளாக நியமிக்காமல் உதவி பொது மக்கள் தகவல் அதிகாரிகளாக நியமித்துள்ளது. தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையே நியமித்துள்ளது.
தகவல் பெற கட்டணம் :
மத்திய அரசு தகவல் பெற கட்டணம் ரூ. 10/- நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ. 50/- நிர்ணயம் செய்துள்ளது. றீeஉமிஷ்லிஐ (6)-ன் படி விண்ணப்பமும்
ரூ. 50/- க்கான பணம் (அ) வங்கி வரைவோலை (ம்.ம்.) அல்லது காசோலையாக மத்திய பொது தகவல் அதிகாரியின் பெயரில் எடுக்க வேண்டும். பேப்பர் பு4 (அ) பு3 அளவுக்கு ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ. 2/- செலுத்த வேண்டும். ஒரு ஆவணத்தை நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது. பின்பு ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ. 5/- வசூலிக்கப்படும்.
தகவல்களை பிளாப்பி அல்லது கணினி டிஸ்கில் கொடுப்பதற்கு ரூ. 15/- வசூலிக்கப்படும்.
பிரிண்டிங் கொடுப்பதற்கு அந்தந்த பிரிண்டரின் செலவை பொறுத்துதான்.
தகவல் என்பது :
பதிவேடுகள் (Record) உத்தரவு (Order)
ஆவணங்கள் (Documents) பயண விவரம் (Log Books)
விளக்கம் (Memo) ஒப்பந்தம் (Contract)
இமெயில் (Email) அறிக்கை (Report)
 கருத்து (Opinion) மாதிரிகள் (Models)
பரிந்துரை (Recommendation) கணினி டேட்டா
பத்திரிக்கை அறிக்கை தனியார் பொது துறையாக
சுற்றறிக்கை (Circular) இருந்தால் அதன் தகவல்
கோப்பு இல்லாத தகவல்களுக்கு பொருந்தாது
தகவல் அறிதல் என்பது
வேலைகள் கண்காணித்தல், ஆவணங்கள், பதிவேடுகள், சான்றிதழ்கள் இவற்றிலிருந்து குறிப்பு எடுத்தல்.
சான்றிதழ் நகல் எடுத்தல்.
தகவல்களை பிரிண்ட் எடுத்தல்.
கேசட்டுகளில், வீடியோவில் பதிவு செய்தல்.
தகவல் அதிகாரிகள் :
தேசிய அளவில் :
தலைமைத் தேர்தல் ஆணையர் அந்தஸ்திற்கு இணையாக தலைமை தகவல் ஆணையர்.
மாநில அளவில் :
– தலைமை செயலர் அந்தஸ்திற்கு இணையாக தçலைமை தகவல் ஆணையர்.
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு துறை சார்பிலும் தகவல் அதிகாரிகள்.
பஞ்சாயத்து சம்பந்தமாக தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் மூலமே பெற வேண்டும்.
மற்ற துறைகளில் அதற்கென அந்தந்த துறை சார்ந்த உதவி தகவல்
அதிகாரியின் மூலம் பெற முடியும்.
தகவல் பெறுதல் :
Section 5 – Subsection (2)ன் படி விண்ணப்பித்த நபர்களுக்கு மத்திய பொது தகவல் அதிகாரி அல்லது மாநில பொது தகவல் அதிகாரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவோ அல்லது அதை தக்க காரணங்களுடன் திருப்பி அனுப்ப வேண்டும். கேட்கும் தகவல் ஒருவருடைய வாழ்க்கைக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ கேட்கப்பட்டிருந்தால் விண்ணப்பம் வந்து 48 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்கப்பட வேண்டம்.
தகவல் மறுப்பதற்கு காரணம் :
Sub section (1)ன் படி தகவலை கொடுப்பதை மறுப்பதற்கு மத்திய அல்லது மாநில தகவல் அதிகாரி மனுதாரருக்கு
1. மறுக்கப்பட்டதற்கான காரணங்கள்.
2. எத்தனை நாட்களுக்குள் மறுக்கப்பட்ட நாளிலிருந்து மேல் முறையீடு
செய்யலாம்.
3. மேல் முறையீட்டு அலுவலகத்தின் விவரம்.
போன்றவை தெரிவிக்க வேண்டும்.
 
தகவல் பெற மாதிரி விண்ணப்ப படிவம்
 To,
The Assistant Police Commissioner,
(or)
Public Information Officer,
1. Name of applicant 

2. Address 

3. Particulars of information required
(i) Subject matter of information 
(ii) Period to which the information relations  to 
(iii) Description of information required 
(iv) Whether information is required by post or in person 
(v) In case of post (ordinary, Registered or speed) 

4. Whether the Applicant is below poverty Line : 
(of yes attach a photo copy of the proof there of)
Place :
Date :                   Signature of the Applicant

தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS.

மனித உரிமைகள்

மனிதனின் அடிப்படை தேவைகள் – உணவு, உடை, இருப்பிடம். இவை மட்டும் இருந்தால் போதாது. அவன் மனித மாண்போடு வாழ தேவையானவைகளை நிறைவு செய்வதே மனித உரிமைகளாகும்.

எல்லா மனிதர்களும் சுதந்திரமாக பிறந்தவர்கள், சம உரிமை உடையவர்கள், பகுத்தறிவும், உள்ளுணர்வும் கொண்டவர்கள் (சுதந்திரமாக பிறந்து சாதி, மதம், கட்சிகள் என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார் ஜேக்குஸ் ரூசே) எனவே சக மனிதர்களிடம் சகோதரத்துவ உணர்வுடன் நடக்க கடமைப்பட்டவர்கள் என்கிறது மனித உரிமைக்கான உலக சாசனம்.

மனித உரிமைகளின் பிரிவுகள் : 

1. குடி உரிமைகள் (Civil Rights)

2. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

3. மனித உரிமைகள் (Human Rights)

குடி உரிமைகள் என்பது அந்தந்த நாட்டு அரசு அந்தந்த குடிமக்களுக்கு வழங்கும் உரிமையாகும்.

அ. வாழ்வுரிமை – பிறந்த இடத்தில் வசிக்க வழங்கப்பட்டுள்ள உரிமை.

ஆ. சுதந்திர உரிமை – பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இவற்றில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இ. சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமை – இன்னல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து மீள உரிமை.

ஈ. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படும் உரிமை – பாமர குடிமகன் முதல் முதல் குடிமகன் வரை சமமாக நடத்தப்படும் உரிமை.

உ. பாகுபாட்டிற்கு எதிரான உரிமை – சாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை.

ஊ. தேசியத்தை சார்ந்திருக்கும் உரிமை – எந்த மதத்தில் பிறந்தவராக இருந்தாலும் பிறந்த தேசத்தை சார்ந்திருக்க உரிமை.

அரசியல் உரிமை : 

அ. கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை – ஒருவர் தாம் சொல்ல விரும்பும் கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை.

 ஆ. சுதந்திரமாக கூட்டம் கூட்டும் உரிமை – சட்டத்திற்கு உட்பட்டு.

இ. இயக்கங்களை கட்டி எழுப்பும் உரிமை.

ஈ. வாக்களிக்கும் உரிமை – 18 வயதிற்கு நிரம்பியர் தான் விரும்புகின்ற நபருக்கு வாக்களிக்க உரிமை.

உ. அரசியலில் ஈடுபட உரிமை.

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் : 

அ. வேலை பெறும் உரிமை – தன் தகுதிக்கேற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பெறும் உரிமை.

ஆ. வேலையை தேர்ந்தெடுக்க உரிமை – தான் விரும்புகின்ற தொழிலை, வேலையை தேர்வு செய்யும் உரிமை.

இ. சொத்துரிமை – தன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துகளை உரிமையாக்கிக் கொள்ளும் உரிமை.

ஈ. போதுமான ஊதியம் பெறும் உரிமை – உழைப்பிற்கேற்ற ஊதியம் கோர உரிமையுண்டு.

உ. கல்வி பெறும் உரிமை – அடிப்படை கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி வரை பெற உரிமை.

ஊ. குடும்பத்தை உருவாக்கும் உரிமை.

எ. சமூக பாதுகாப்பு பெறும் உரிமை – உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு கோரும் உரிமை.

ஏ. காப்பீடு செய்து கொள்ளும் உரிமை – தன்னுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் காப்பீடு செய்ய உரிமை.

ஐ. மருத்துவ உதவி பெற உரிமை.

ஒ. சட்டத்தின் வழியில் ஒவ்வொருவரும் போராடவும் ஒன்று கூடவும் உரிமையுண்டு.

அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) 

அடிப்படை உரிமைகள் என்பது அந்தந்த நாட்டிற்கு மட்டும் பொருந்தக் கூடியது. நமது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் வழங்கி இருக்கிறது.

1. பிரிவு 14-18 சமத்துவ உரிமை (Rights to equality)

2. 19 – 22 சுதந்திர உரிமை (Right to Freedom)

சுதந்திர உரிமை என்பது பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என விரிவான விளக்கம் பெறுகிறது. அவைகள்

19(1) a பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரம் (Freedom of speech & Expression)
19(1) b ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Form Assembly)

19(1) c சங்கம் அமைக்கும் சுதந்திரம் (Freedom of Form association)

19(1) d இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம் (Freedom of Reside and Settle)

19(1) e இந்தியா எங்கும் தங்கி வாழும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)

19(1) f தொழில், பணி, வணிகம் செய்யும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)

3. பிரிவு 23 – 24 சுரண்டலுக்கு எதிரான உரிமை (Rights to fight against Exploitation)

4. பிரிவு 25 – 28 சமய சுதந்திர உரிமை (Rights to freedom of Religion)

5. 29 – 30 கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமை (Cultural and educational Rights)

6. அரசியலமைப்பு தீர்வு வழிகள் (Rights of constitutional Remedies)

7. கருத்து சுதந்திரம் (Rights to Expression)

மனித உரிமைகள் (Human Rights)

மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும்.

மனித உரிமை என்பது ஒற்றை பரிமான நிலையில் நோக்காமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சார உரிமைகளோடு இணைத்துப் பார்க்கின்ற பன்முக பார்வையாகும்.

மனித உரிமை என்னும் கட்டமைப்பை சூழ்ந்து குடிமக்கள், மக்கள் இயக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக பொருளாதார மேம்பாடு, மத்திய மாநில அரசுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என உள்ளது. இவைகளுக்கு மத்தியில் மனித உரிமைகளை காப்பது, செயல்படுத்துவது என்பது கடினம் என்றாலும் மனித உரிமைகளை பெறுவது நமது கடமையாகும். மனித உரிமைகளைப் பற்றி பேசும் போது, அதற்காக அரசிடம் போராடும் பொழுது பயங்கரவாதி அல்லது தீவிரவாதி என்று கூறி அடக்குமுறை கையாளப்படுகிறது.

காவல் துறையை பற்றிய மனித உரிமைகள் :

– கைது செய்யும் பொழுது அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.

– கைதுக்கு கைவிலங்கு போட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  
 – 16 வயதிற்கு கீழ் உள்ள ஆண் / பெண் சிறுவர்களை விசாரணை என்ற பெயரில்
இருக்கும் இடத்தைவிட்டு அழைக்கக் கூடாது.

– பெண்களை மாலை 6.00 மணிக்குமேல் கைது செய்யக்கூடாது.

– கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.

– கைதியை அடிக்கக் கூடாது.

மனித உரிமை சட்டங்கள் : 

1993 – மனித உரிமை பாதுகாப்புச் சட்டம். இதில் அரசியல் அமைப்பு சட்டம் 338ன் கீழ் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

1992 – சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

1999 – மகளிர் நல பாதுகாப்பிற்கென தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

1950 – மனித வர்த்தகம் சம்பந்தமான பன்னாட்டு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

1923 – தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.

1926 – தொழிற்சங்க சட்டம்.

1936 – சம்பள சட்டம்.

1942 – வாராந்திர விடுமுறை சட்டம்.

1946 – தொழில் நிறுவன, வேலை நிலையானைகள் சட்டம்.

1947 – தொழில் தகராறு சட்டம்.

1948 – தொழிலாளர் காப்புறுதி சட்டம்.

1948 – தொழிற்சாலை சட்டம்.

1948 – குறைந்தபட்ச சம்பள சட்டம்.

1952 – தொழிலாளர் சேமநிதி சட்டம்.

1966 – பீடி, சிகரெட் தொழிலாளர்கள் வேலை நிபந்தனைகள் சட்டம்.

1971 – மருத்துவ முறையில் கருச்சிதைவு சட்டம்.

1976 – சம ஊதிய சட்டம்.

1986 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்.

1993 – பயங்கரவாத தடுப்பு சட்டம்

1994 – மனித உறுப்புகள் மாற்று சட்டம்.

போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. “சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு எட்டாதது” என்றார் பேரறிஞர் அண்ணா.

ஆம். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென்று தனித்தனி ஆணையங்களும், நீதி மன்றங்களும், உரிமை சாசனங்களும், பிரகடனங்களும் எவ்வளவோ உருவான பின்பும் ஆங்காங்கே மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் நிலைதான் இன்றளவும் தொடர்கின்றது. இந்நிலை மாற மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க சங்கங்களாக கூட்டமைப்புகளாக ஒன்றிணைவோம்.

தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS

கூட்டமைப்பாய் சேர்வோம்!

தோழர்களே! தோழிகளே!

கடந்த இரண்டு இதழ்களில் கூட்டமைப்பு நம்மிடம் எப்படி உருவாகின்றது? அதற்கு தடையாக உள்ளவை எவை? கூட்டமைப்பாக மாறினால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன? என்பதனை கண்டோம்…

இவ்விதழில் நமக்கு முன்னோடியான சில இயக்க பண்புகளை காண்போம். இயக்கம் என்றாலே தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதாகும். நாம் தொடர்ந்து இயங்கி செயல்பட்டால்தான் பாதிப்புகளிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும் அல்லது நமக்கான பயன்களை நாம் பெற இயலும்.

நாமும் ஒரு இயக்கமாக மாறி… அல்லது கூட்டமைப்பாக மாறி செயல்பட நல்ல இலக்கு அல்லது குறிக்கோள் காண வேண்டும். நமது கூட்டமைப்பு எதை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவு வேண்டும். அந்த தெளிவு தான் குறிக்கோளாகும். இலக்கு இல்லாத பயணம் நடு ஆற்றில் துடுப்பு இல்லாமல் பயணிக்கும் படகு போன்றது.

இன்று நாம் ஒரு அமைப்பாக கட்டப்பட்டு விட்டோம். ஆனால் இந்த அமைப்பு எதற்காக என்று எண்ணிப் பார்த்தோமா? நாலுபேர் சேர்கிறார்கள்… வருகிறார்கள் நாமும் தான் சென்று வருவோமே… என்ற எண்ணத்தில் வருகின்றோமா? அல்லது நாலுபேர் என்ற தெளிவான சக்தியோடு நாமும் ஒரு சக்தியாக சேர்ந்து சாதிக்கப் போகின்றோமா? அந்த சாதிப்பு செய்வதற்காக நாம் நமக்குள் ஒரு குறிக்கோளை அல்லது இலக்கை உருவாக்கி இருக்கின்றோமா? “பாரத நாட்டிற்கு சுதந்திரமே” என்ற குறிக்கோளோடு உருவாக்கப்பட்டது காங்கிரஸ் பேரியக்கம். அந்த இயக்கத்திற்கு தெளிவான குறிக்கோள் இருந்ததினால்தான் தியாக சிந்தனையுள்ள; அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட உறுப்பினர்கள் இருந்தனர். அதுவே அவர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிராக போராட்ட உணர்வை வளர்த்தது. பல இழப்புகளுக்கு பிறகு நாம் சுதந்திரம் பெற முடிந்தது. எனவேதான் ‘குறிக்கோள்’ ஒன்றை நாம் உருவாக்குவதன் மூலம் தான் நமது செயல்கள் இருக்கும் என்பதை உணருங்கள்.

ஆம் தோழர்களே! தோழிகளே!… இன்று நாம் உருவாக்கியிருக்கின்ற பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் கூட்டமைப்பிற்கு ஒரு தெளிவான பாதை என்ற குறிக்கோளை உருவாக்குங்கள். இந்த குறிக்கோள் நமக்கு நல்ல வழிகாட்டும்… நமது செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்… இந்த இலக்கு நமது பிரச்சினைகளை களையக் கூடிய சமுதாய புரட்சியை உள்ளடக்கியதாக இருக்கட்டும். ஆம் தோழர்களே! தோழிகளே!…

சுரண்டல், பெண்ணடிமை, ஆதிக்க சக்திகளின் நடமாட்டம் போன்றவற்றை அழிக்கும் சமுதாய புரட்சியாக இருக்க வேண்டும்! இருக்கத்தான் வேண்டும்…

 ‘சமுதாய புரட்சி’ என்பது மரங்களின் கிளைகளை போன்றதன்று; மாறாய் மரத்தின் ஆணி வேரையே ஆட்டி பிடுங்குவதுதான் என உணருங்கள்.

ஆதிக்க சக்திகள் இன்று அரசியல்வாதிகள் என்ற போர்வையிலே… மதவாதிகள் என்ற போர்வையிலே… ஜாதி என்ற அடையாளத்திலே… பாலினம் என்ற உருவத்திலே… இன்று உலா வருகிறது. உணருங்கள்… உயர்த்துங்கள் நம் சமுதாயத்தை… இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘புரட்சித் தீயாக’ உங்களது அமைப்பின் இலக்கு அமைய வேண்டும். ஆதிக்க சக்திகள்தான் இன்று வளர்கிறார்கள். ஏனென்றால் சுரண்டி வளம் காணுவது தானே அவர்களின் இலக்கு…! அவர்களின் இலக்கிலே… தீமையாய் இருந்தாலும் வெற்றி பெறுகிறார்களே! அவர்களே… கயவர்களே வளம் பெறும்போது…! நல்லதற்காக… சமுதாய வாழ்விற்காக நாம் உருவாக்கும் இலக்கில் நாம் வெற்றி பெற முடியாதா? எனவேதான் தோழர்களே! தோழிகளே! இலக்கை உருவாக்குங்கள்… அதை நோக்கி செல்லுங்கள்… வளம் வரும் நம் வாழ்வில்… இயக்கம் என்பதே அர்ப்பணிப்பு தியாக மனப்பான்மையை உள்ளடக்கியது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த பண்புகள் தான் இயக்க வளர்ச்சிக்கு உறுதுணை என்பதை மறவாதீர். நம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை என்ற காதல் வையுங்கள். அந்த காதல் அர்ப்பணிப்பு, நமது அமைப்பிற்கு என்று ஒரு விதிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். “நெஞ்சுப் பொறுக்குதில்லையே… இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்…” இவ்வரியை பாருங்கள்.

பாதிக்கப்பட்ட நமது நெஞ்சம் குமுற வேண்டும். குமுறல் தான் நல்ல செயல்களுக்கு விடிவாக இருக்கும். கண்ணகியின் குமுறல் மதுரையை எரித்ததா இல்லையா? அந்த குமுறல்தான் ஆக்ரோ­மாக மாறி போராடத் தூண்டும் என்பதை மறவாதீர். எனவேதான் தோழர்களே!… தோழிகளே! நமது சமுதாயத்தில் நிலவுகின்ற சுரண்டலை பாருங்கள்… சுரண்டிவிட்டு நெஞ்சு நிமிர் நடையினை பாருங்கள்… அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை பாருங்கள்… அவர்களின் ஆணவப் போக்கை பாருங்கள்… இத்துணையும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதினால் தான் நாம் சுரண்டப்படுகின்றோம்; அதிகாரத்துக்குள் ஆட்பட்டு அல்லல்படுகிறோம். இதற்கு தீர்வு வேண்டாமா?

நேற்று நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ… அப்படித்தான் இன்றும் நாம் வாழ்கின்றோம்… ஆனால் அதிகார வர்க்கத்தினரோ… ஆண்டுக்கு ஆண்டு லட்சங்களையும் கோடிகளையும் ஈட்டி ‘பதி’களாக காட்சி தருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்.

இவையயல்லாம் நம் கண்களுக்கு பிரச்சினையாக ஏன் தெரியவில்லை? இவற்றையயல்லாம் நாம் ஏன் உணர மறுக்கிறோம்?… எனவேதான் ‘சமூக பிரச்சினை’ ஒன்றை கையில் எடுங்கள். குழுவாக அமர்ந்து நமது பிரச்சினைகளை அலசுங்கள். அந்த அலசலின்போது சமூகத்தின் அவலங்கள்; அதில் நம் நிலை; அதனால் நாம் அடைந்த மோசடிகள் அல்லது தீமைகள் தெரியவரும். இதனால் நாம் பாதிக்கப்பட்டதும் அறிய முடியும்

இதன் மூலம் போராட முடியும். நம்மில் உள்ள ஜனசக்தி என்ற ஆயுதம் மூலம் போராட்ட களத்திற்கு வாருங்கள். ஜனசக்தி திரட்ட பொதுவுடமை கருத்துக் கொண்ட அமைப்புகளையும் அணுகினால் அவர்கள் உதவுவர். போராட்டம் வேகம் பெறும். புறக்கணித்தவர்கள் நம் கோரிக்கையை நிறைவேற்றுவர். நம் வாழ்வில் ‘வளம்’ காண வழி பிறக்கும் என்பதை மறவாதீர்.

பல இயக்கங்கள் இம் முறையை பின்பற்றிதான் நமது சமுதாயத்திற்கு நல்லதை செய்துள்ளனர் என்பதை மறவாதீர். அந்த இயக்கத்தில் ஒன்றாக நமது கூட்டமைப்பும் ஏன் மாறக் கூடாது? எண்ணுங்கள் தோழர்களே! தோழிகளே!…

புதிய சமுதாயம் படைக்க இயக்கமாக உள்ள நம் கூட்டமைப்பால் தான் முடியும். அந்த அமைப்பு அல்லது இயக்க சிந்தனையை அசைபோடுங்கள். அசைக்க முடியாத நம்மை எவரும்…! சார்ந்து வாழ்வதே வாழ்க்கை – நம்மை சார்ந்தவர்களுக்காக; நமக்காக போராட மறுப்பது ஏன்?

இயக்கங்களாக உருவாக்கம் பெறுவது சாதனைகள் செய்வதற்காகத் தான் என்பதை மறவாதீர்கள். அந்த சாதனை செய்யும் இயக்கமாக நமது கூட்டமைப்புகள் மாற வேண்டுமானால் நமது பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க கையில் எடுங்கள். எடுப்பீர்கள் நம்பிக்கை நமக்கும் உள்ளது.

அந்த நம்பிக்கை நம் மனதில் ஆழமாக இருக்கட்டும். அடுத்த இதழில் சந்திப்போம்…

எஸ்.அசோக்குமார் 
ஒருங்கிணைப்பாளர், 
ஜெயங்கொண்டம்.