அன்பு மொழி கற்றிடலாம்

அ, ஆ என்றே என்றே சொல்லி

அன்பு மொழி கற்றிடுவோம்

இ, ஈ என்றே சொல்லி

ஈகைத்திறனை வளர்த்திடுவோம் !

உ, ஊ என்றே சொல்லி

ஊக்கம் தன்னை பெருக்கிடுவோம் !

எ, ஏ என்றே சொல்லி

ஏற்றம் கொண்டு வாழ்ந்திடுவோம் !

ஐ சொல்லி என்றே சொல்லி

ஐயம் தன்னை விரட்டிடுவோம்

ஒ, ஓ என்றே சொல்லி

ஒற்றுமையை உணர்த்திடுவோம் !

ஒள என்றே சொல்லி

ஒளவை வாக்கை காத்திடுவோம் !

ஃ என்றே சொல்லி

எஃகு மனிதராய் வாழ்ந்திடுவோம் !

A. நோயல் மேரி
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்.
புள்ளம்பாடி, VDV – 1080

தேனியின் தேடல்

வெற்றி

தேனைச் சேமிக்கிறது

தேடலால் தேனிக்கு வெற்றி

ஆனால்

நண்பனே ! உனக்கு

வெற்றி ஒன்றில்லை

ஆர்வத்துடன் பார்த்து

ஆவேசத்துடன் படித்து

சுறுசுறுப்பாய் எழுதினால்

என்றும் புன்னகைக் காலம்

ஒற்றுமையாய் நாம் தேடிய

வெற்றியுடன்

அலையின் ஆர்வம்

கரையைத் தொடுகிறது

ஆர்வத்தால் அலைக்கு வெற்றி

புயலின் ஆவேசம்

பூமியை மாற்றுகிறது

ஆவேசத்தால் புயலுக்கு வெற்றி

எறும்பின் சுறுசுறுப்பு

விரைவில் செல்கிறது

சுறுசுறுப்பால் எறும்பிற்கு வெற்றி

பூவின் புன்னகை

அனைவரையும் கவர்கிறது

புன்னகையினால் பூவிற்கு வெற்றி

காகத்தின் ஒற்றுமை

வேடனுக்கு ஏமாற்றம்

ஒற்றுமையால் காகத்திற்கு வெற்றி.


M.சுஜாதா
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்
புள்ளம்பாடி. MKT- 1037

எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விளக்கங்கள்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தார் போலக் கெடும்

எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :

எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired – A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune – I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency – D குறைத்துவிடுதல்

Syndrome – S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?

எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

எய்ட்ஸ் நோய் பரவும் விதம் :

எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.

  1. உடல் உறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது “வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்”
  2. எய்ட்ஸ் வைரஉள்ளவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து, ஊசி குழல் சரியாக சுத்தம் செய்யப்படாமல் மற்றவருக்கு பயன்படுத்தும்போது
  3. இக்கிருமி உள்ளவர் இரத்தத்தை பிறருக்கு செலுத்தும்போது
  4. இவ்வைரஉள்ள தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுவிட்டால் இன்று அதற்கான சிகிச்சை கிடையாது / மருந்து கிடையாது.

மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ளவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய அபாயமுள்ளவர்கள் :

  1. பால்வினை நோய்க்கு ஆளானவர்கள்
  2. பிறப்பு உறுப்பில் புண்களை உடையவர்கள்,
  3. பல்வேறு நபர்களோடு உடலுறவு கொள்பவர்கள், 
  4. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள், 
  5. போதை பொருட்களை உபயோகிப்பவர்கள்.

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?

1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, 2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, 3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், 4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது

எய்ட்ஸ் நோய் எதனால் பரவாது ?

  1. எச்.ஐ.வி.பாதித்த நபருடன் கை குலுக்குவதால், 
  2. காற்று, நீர் போன்றவற்றால்,
  3. கொசு மூலம், 
  4. இந்நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடுவதால்

ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் :

நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆற்றுப்படுத்துதலும், இரத்தப்பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆலோசனை விவரங்களும், பரிசோதனை முடிவுகளும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசோதனை முடிவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் என்று தெரியவந்தால் ஆற்றுப்படுத்துதலும், அவர்கள் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

எச்.ஐ.வி.உள்ள கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி.இல்லாத குழந்தையைப் பெற முடியுமா? முடியும்.

கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் நெவிரப்பின் என்ற மாத்திரை கொடுப்பதாலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தை எடைக்கு தகுந்தாற்போல் ஒரு கிலோவிற்கு 2.மி.கி. நெவிரப்பின் மருந்து கொடுப்பதாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி.பரவுவதை தடுக்க முடியும். இந்த வசதி அனைத்து அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளது. இங்கு இவர்களுக்கு எச்.ஐ.வி.இல்லாத குழந்தையை பெற்றெடுக்க ஆலோசனையும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே மக்கள் அனைவரும் இந்நோய் பற்றி உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.

எய்ட்ஸ்  வருமுன் யோசி ! வந்தபின்பும் வாழ்வை நேசி !!

கவிதை

மானாக இருந்தால்

குதித்து வந்து பார்ப்பேன்

மயிலாக இருந்தால்

ஆடி வந்து பார்ப்பேன்

ஆனால் !

நான் மனிதனாக உள்ளேன்

என் அன்பு எப்பொழுதும்

உங்களை பார்த்துக்கொண்டிருக்கும்.

M.அனுசுயா
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்
JKM – 1053

தொழிலாளி – மேசை துடைக்கும் குழந்தை

துள்ளி சென்றே பயிலும் வயதில்

துடைக்க வந்துவிட்டான் – மேசை

துடைக்க வந்துவிட்டான் – ஐயோ !

கொல்லன் உலையாய்க் கொதிக்கும் நெஞ்சில்

கொட்டி எரித்துவிட்டான் – ஆசையைக்

குறைவறப் போக்கி விட்டான்

கண்ணைத் திறந்தே உலகைக் காட்டும்

கல்வியை இழந்துவிட்டான் – சோகக்

கதையாய் உருவெடுத்தான்

அன்னை தந்தை ஏற்றிய சுமையை

அரும்பில் சுமக்கிறான் – துயரில்

ஆழ்ந்து நெளிகின்றான்

எட்டாக் கிளையில் கிட்டாக் கனியாய்

இருக்கும் கல்வியினை – உண்டால்

இனிக்கும் நல்லமுதைத்

தொட்டுப்பிடித்துச் சுவைத்து மழைத்

துணைவருவார் யாரோ ? – இவன்

துயர்தீர்ப்பார் யாரோ ?

வி.ஜெனிட்டா

ஏழையின் இரக்கம் – (சிறுகதை)

சுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வயிற்றுக்கு உணவு. அவருக்கு ஐந்து பெண்கள். சுப்பையா கஷ்டப்பட்டு தன் ஐந்து மகள்களையும் படிக்க வைத்தார். ஒரு நாள் சுப்பையா தன் மகள்களை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூருக்குக் கூலித் தொழில் செய்ய சென்றார். அவர் மனைவி மகள்களை சித்தாள் வேலைக்குச் சென்று உணவும், பாடப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து வளர்த்து வந்தார். வெளியூருக்குச் சென்ற சுப்பையா அங்கு சுனாமியால் தன் தாய், தந்தையை இழந்து ஒரு பெண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தார். சுப்பையா வீட்டில் கஷ்டம் இருந்தும் அந்தப் பெண்ணையும் தம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். சுப்பையா தன் ஐந்து மகள்களைப் போல அந்தப் பெண்ணையும் படிக்க வைத்தார். சுப்பையா கூலி வேலை செய்துக் கஷ்டப்பட்டாலும் அந்த பெண்ணையும் தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட மனதிருப்தி அவரிடம் இருந்து, அந்த ஆறு பெண்களும் நன்றாகப் படித்து சுப்பையாவை ராஜா போல் ஆக்கினர்.

ஒரு மனிதன் சிறிய வயதில் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ பெரிய வயதில் அவ்வளவு மகிழ்ச்சியடைவான். கஷ்டப்பட்டால் மட்டும் போதாது ஒரு மனிதரிடம் இரக்கமும் இருக்க வேண்டும்.

– S. SHEEBA, JKM – 1024

மனித உரிமைகள் மீறல் என்றால் ?

ஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில் அரசோ, காவல்துறை அரசு அதிகாரிகள், வனத்துறை, ஆயுதப்படை அதிகாரி, அரசு சார்பாக ஒப்பந்தக்காரரைப் போல் செயல்படுகின்ற எவரேனும் ஒருவர் அடுத்தவரின் மனித உரிமையில் தலையிட்டோ மரியாதைக் குறைவாக நடத்துகிறார் எனில் அவைகளும், மனித உரிமைகள் மீறல்களே. மனித உரிமைகள் அரசுக்கு எதிராகவே கோரப்படுகின்றது. தனி மனிதர்களுக்கு எதிராக கோரப்படுவதில்லை. இருப்பினும் ஒரு தனி மனிதன் இன்னொருவரின் வாழ்வுரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் தொடர்பான உரிமைகளை மீறினால் பாதிக்கப்பட்டவர் அந்த உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசினை அணுக முடியும். அரசு அந்த உரிமையை மீறுவோருக்கு தண்டனை வழங்கவோ (அல்லது) தடுத்து நிறுத்தவோ தவறினால் அப்போது அது மனித உரிமை மீறலாக மாறுகிறது.

மனித உரிமை மீறலுக்கான சில வரையறைகள் :

மக்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலையால் வெளியிடப்படும் நச்சு, வேதியியல் கழிவுகள் கலக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறுவதே

வாழ்வுரிமை மீறலாகும்.

– காவலரால் சந்தேகப்பட்டு அடித்தல், விலங்கிடல் மற்றும் சித்ரவதை செய்தல் என்பன மனித மாண்பு மற்றும் உடல் பாதுகாப்புக்கு எதிரான உரிமை மீறலாகும்.

– ஒரு பெண் சிறைக் கைதி சிறைக்காப்பாளரால் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்ற புகார் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க தவறுதல் சட்டப்படி சம பாதுகாப்பளிக்கும் உரிமை மீறலாகும்.

– தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கோவிலில் வழிபட, கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கத் தடுக்கின்ற உயர் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மறுத்தல் பாகுபாடு சார்ந்த உரிமை மீறலாகும்.

வேலைத் தளங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் கொடுக்கப்படுவதையும், பணி உயர்வில் சம வாய்ப்பு கொடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு முதலாளிகளுக்கான சட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையினர் புறக்கணித்தல் சம வாய்ப்பிற்கான உரிமை மீறலாகும்.

பாதுகாப்பு படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு கடையின் சொந்தகாரருக்கு இழப்பீடு கொடுக்காமல் எடுத்துக் கொள்ளுதல். வாழ்வாதார உரிமை மீறலாகும்.

மாவட்ட நிர்வாகம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக வெளியிட மறுத்தல் செய்தி பெறும் உரிமை மீறலாகும்.

புலனாய்வுக் குழுமத்தால் முகம்மதியர் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு மதபாடங்கள் கொடுக்கப்படுவதை அவர்கள் தேச விரோதிகள் என்று காரணங்களை காட்டி மறுத்தல் மதவுரிமை மீறலாகும்.

வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காடு அழிக்கப்படுவதையும், சட்டத்திற்குப்புறம்பாக மரங்கள் வெட்டப்படுவதையும் கட்டுப்படுத்த இயலாதிருந்தால் சுற்றுச்சூழல் உரிமை மீறலாகும்.

அரசு என்பது மத்திய மாநில அரசுகளையும் மேலும் நாட்டை நிர்வகிக்க உதவுகின்ற நிறுவனங்கள் முகவாண்மைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்து மக்களையும் குறிக்கும். மாவட்ட ஆட்சி அலுவலர்கள் ஊராட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், நகராட்சி, அஞ்சல்துறை, மின்சாரத்துறை, அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான அரசின் கட்டுப்பாட்டிற்குள்ள குழுக்கள் அனைத்துமே அரசின் அங்கமாகவே குறிக்கப்படும்.

தகவல் தொகுப்பு :
A.ஆலீஸ்மேரி

பாலின நிகர்நிலை

பாலினம் என்றால் பெண்கள், பெண்கள் மேம்பாடு போன்றவற்றை மையப்படுத்துவது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பாலினம் என்பது ஆண்கள், பெண்கள் மத்திய சமூக, கலாச்சார வரையறையாகும். இது உழைப்பு, சந்தை, குடும்பம், அரசியல் கட்டமைப்பு போன்றவற்றில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே வெளிப்படும் உறவு கட்டமைப்பின் வேறுபாட்டை வெளிப்படுத்தும் ஒரு கருத்து கருவியாகும்.

பாலினம் என்ற கருத்தாக்கத்தை விவரிப்பு நிலை, பகுப்பாய்வு நிலை என்ற 2 மட்டங்களில் விவாதிக்கலாம்.

1. விவரிப்பு நிலை :
விவரிப்பு நிலை ஆணுக்கும், பெண்ணுக்குமிடையேயான பால் வேறுபாட்டை குறிப்பது. அத்துடன் சமூக வேறுபாடுகள், வர்க்கம், சாதி, இனம், மதம், வயது, தொழில் மட்டுமல்லாமல், கால மாறுதலால் ஏற்படும் மாறுபாடுகளை விவரிப்பதாகும். மேலும் பாலினம் என்ற கருத்தாக்கம் சமூக ரீதியாக வரையறுக்கப்பட்டதால் அதனை மாற்றியமைக்க முடியும்.

2. பகுப்பாய்வு நிலை (Analytical)
பாலின முறைமையினால் தாக்கம் பெறுகின்ற ஆண், பெண் அடையாளங்கள், அதிகாரங்கள், அதிகார உறவுகள், வளங்கள் அவற்றை கட்டுப்படுத்துதல், அதனால் பெறும் பலன்கள் ஆகியவற்றை இனங்காணவும் ஆய்வு செய்யவும் நமக்கு வழியேற்படுத்துகிற தத்துவ மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையே பகுப்பாய்வு நிலை. மேற்கூறிய 2 கோணங்களிலும் பாலினத்தை பார்க்க வேண்டும்.

உழைப்பின் பாலின பிரிவினை :
ஆணும், பெண்ணும் என்ன செய்ய தகுதி உடையவர்கள் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் நிலவும் சமூக கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுப்பட்ட பொறுப்பு, கடமைகளை பிரித்தளிப்பதையே உழைப்பின் பாலின பிரிவினை என்று சொல்லப்படுகின்றது. இது 3 வகையாக பிரிக்கப்படுகின்றது.

உற்பத்தி உழைப்பு : (Productive Work)
நுகர்வுக்கும், வியாபாரத்திற்குமான பண்டங்களையும் சேவைளையும் (விவசாயம், மீன் பிடித்தல், சொந்த தொழில்) உற்பத்தி செய்வதும், குறிப்பாக சம்பளம் அளிக்கப்படும் வேலை அல்லது வருமானத்தை உற்பத்தி செய்பவை உற்பத்தி உழைப்பில் அடங்கும். ஆணும், பெண்ணும் உற்பத்தி உழைப்பில் ஈடுபட்டாலும் பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் பாத்திரமும், பொறுப்பும் மாறுபட்டிருக்கும். பெண்களின் உற்பத்தி உழைப்பு ஆண்களின் உற்பத்தி உழைப்பை விட குறைவான அளவுக்கே புலப்படக்கூடியதாகவும் குறைவாக மதிப்பிடக் கூடியதாகவும் உள்ளன.

மறு உற்பத்தி உழைப்பு : (Reproductive Work)
மறு உற்பத்தி உழைப்பு என்பது 2 விதத்தில் பார்க்கப்படுகிறது. உடலியல் மறு உற்பத்தி (Biological Work) உழைப்பு என்பது குழந்தையை கருவில் சுமப்பது, பெற்றெடுத்து பாலூட்டுவது, வளர்ப்பது போன்றவற்றை குறிக்கும். மற்றும் சமூக மறு உற்பத்தி (Social reproductive) உழைப்பு என்பது உணவு தயாரிப்பு, தண்ணீர் பிடிப்பது, விறகு கொண்டுவருவது வேலைகள் மற்றும் பராமரிப்பு, குடும்ப ஆரோக்கியம் போன்ற குடும்ப வேலைகள் மற்றும் பராமரிப்பு அடங்கும். மனித குலத்தின் இருப்புக்கு மறு உற்பத்தி பணி மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் மறு உற்பத்தி உழைப்பு மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுவதாகவும், அதிக நேரம் பிடிப்பதாகவும் இருந்த போதும் இது முக்கியமானதாக கருதப்படுவதில்லை. இது பெரும்பான்மையாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் பொறுப்பாகவே இருக்கிறது.

சமூக உழைப்பு (Community Work)
சமூக உழைப்பு என்பது திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், சமூக முன்னேற்ற செயல்பாடுகள் (ரோடு, மின்வசதி, பன்ளிக்கூடம், ரே­ன் கடை, சுகாதாரம்) குழுக்களிலும், அமைப்புகளிலும் பங்கெடுப்பது, உள்ளூர், அரசியல் செயல்பாடுகள் இன்னும் இது போன்ற சமூக நிகழ்வுகளை கூட்டாக செயல்படுத்துவதாகும். சமூகங்களை பற்றிய பொருளாதார ஆய்வில் இது போன்ற உழைப்பு ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூக செயல்பாட்டிற்கு தன்னார்வ உழைப்பு கணிசமாக செலவிடப்படுகிறது. அது சமூகத்தின் ஆன்மீக, பண்பாட்டு வளர்ச்சிக்கும், சுய நிர்ணயத்திற்கும் மிகவும் அவசியமாகும்.

மேற்கூறிய பாலின உழைப்பு பிரிவினையை கணக்கிட்டால் (24 மணி நேரத்தில் ஆண் செய்யும் வேலைகளையும், பெண் செய்யும் வேலைகளையும் பட்டியலிடுதல்) பெண்கள் செய்யும் வேலைகள் பெரிதாக கணக்கிடப்படாத நிலை விளங்கும். ஆணின் உழைப்பும், பெண்ணின் உழைப்பும் சமமாக மதிப்பிடப்படுவதில்லை. சமமாக பிரதிபலன் பெறுவதில்லை என்பதால் பாலின உழைப்பு பிரிவினை சமனற்ற நிலைக்கும், மேல் கீழ் அதிகார கட்டமைப்புக்கும் இட்டு செல்கிறது

தொகுப்பு :
S.மரியசகாயமேரி
CCO, கும்பகோணம்

மூலிகை மருத்துவம் – செய்முறை விளக்கம்

கடந்த இதழில் மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விவரங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இம்மாத இதழில் கிராமபுறங்களில் எளிதாக பரவும் நோய்கள் பற்றியும் அதற்குரிய காரணங்கள் பற்றியும், அறிகுறிகள் பற்றியும் தீர்விற்கான மருத்துவம் பற்றியும் மேலும் மருந்து செய்முறை பற்றியும் இவ்விதழில் காண்போம்.

மருந்துகளின் வகைப்பாடு :
சித்தமருத்துவத்தில் 64 வகையான மருந்துகள் உண்டு.

32 உள் மருந்து

32 வெளி மருந்து

சூரணம் : (பொடி செய்தல்) சூரணம் என்பது மூலிகையின் இலை, தண்டு, பூ, வேர், காய், கனி போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர காயம் (துணியால் சளிப்பது) செய்ய வேண்டும். இது 6 மாதங்கள் வன்மையுடன் இருக்கும்.

தைலம் : மூலிகை சாற்றில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் கலந்து கொள்வது (பல முறை காய்ச்சுதல் என்பது காய்ந்து கொண்டிருக்கும் தைலத்தை ஒரு குச்சியில் எடுத்து அனலில் காட்டினால் சொட, சொட என சத்தம் கேட்கும்.  தைலம் ஒரு வருடம் வன்மையுடன் இருக்கும்.

மனப்பாகு : மனப்பாகு என்பது மூலிகை சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி தேன் பதத்தில் இறக்கி பத்திரப்படுத்தி பயன்படுத்துவது 3 மாதம் வன்மையுடன் இருக்கும்.

லேகியம் : லேகியம் என்பது மூலிகைகளுடன் மருந்து பொருட்களும், சர்க்கரையும் சேர்த்து காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் இறக்கி தேன் அல்லது நெய் சேர்த்து இறக்கி பயன்படுத்துவது (கம்பி பதம் என்பது காய்ந்து கொண்டிருக்கும் லேகியத்தை கரண்டி அல்லது கையில் எடுத்தால் கம்பி போல வரும்)

செந்தூரம் : செந்தூரம் என்பது பாசானம் மற்றும் உலோகங்களை மூலிகை சாறுடன் சேர்த்து செந்நிறம் காணும் வரை எரித்து பொடி செய்து வைத்துக் கொள்வது. 500 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

பஸ்பம் : பஸ்பம் என்பது பாசானம் அல்லது உலோகங்களை மூலிகை சாறில் அரைத்து வில்லை செய்து மண் சீலை செய்து காயவைத்து மருந்தின் அளவிற்கேற்ப விராட்டி புடமிட்டு எடுக்க வேண்டும்.

இது 900 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

குறிப்பு : 

  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தனியாக சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் ஒரு அரிசி எடை அளவுதான் சாப்பிடவேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தீராத வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கை நீலக்கலரில் மாறினால் தீராத வியாதி என்பதாகும்.

கசாயம் : கசாயம் என்பது உலர்ந்த மூலிகை சரக்குகளை இடித்து நீர் விட்டு 8-ல் 1 பங்காக காய்ச்சி வடிகட்டி எடுப்பது. 3 மணி நேரம் வன்மையுடன் இருக்கும்.

கிராமங்களில் பரவும் பொதுவான நோய்கள் :
காலரா, அம்மை, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, கக்குவான் இருமல், சோகை, அக்கி, சிரங்கு, வாந்தி, பேதி, மூலம், புற்றுநோய், தொழுநோய், தலைவலி, பல் வலி, காது வலி, கண் வலி, விரல் சுத்தி, கட்டிகள், காசநோய், ஆஸ்த்துமா, குடல் புண், மூட்டு வலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, தேமல், வாதநோய், வயிற்று வலி, மாரடைப்பு, கர்ப்பப்பை கோளாறு, நெஞ்சு வலி, தொண்டையில் சதை வளர்தல் (டான்சில்) கால் ஆணி, பித்த வெடிப்பு, பொடுகு, குடற்புழு.

1. நோய் – வயிற்றுப்போக்கு

காரணங்கள் :

  • – ஜீரணமின்மை,
  • – எண்ணெய் பதார்த்தங்கள்,
  • – நெய், எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது
  • – மாவு பண்டங்கள்,
  • – காரமான உணவு,
  • – அதிக கண் விழிப்பு,
  • – அதிக பிரயாணம்

அறிகுறிகள் : வயிற்றுக் கடுப்பு, வயிறு இறைச்சல், வாந்தி, வாய் குமட்டல், புளிச்ச ஏப்பம், வாந்தி வருவது போல் உணர்வு, மலத்துடன் சளி, இரத்தம், சிறுநீரைக் கட்டுப்படுத்தும், காது அடைத்தல், கண் சரியாக தெரியாமை.

மருத்துவம் : காட்டாத்திப்பூ சூரணம் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

மருந்து செய்முறை :

காட்டாத்திப்பூ சூரணம் தேவையானவை :
காட்டாத்தி பூ ¼ கிலோ
ஓமம் ¼ கிலோ

ஓமத்தை லேசாக வறுத்து இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்ய வேண்டும்.

காட்டாத்திபூவை இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி தேன் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

2. நோய் :  சளி, இருமல்

காரணங்கள் :

  • – குளிர்ந்த தண்ணீர் குடித்தல்.
  • – குடிநீர் மாறுபடுதல்.
  • – இரசாயன பொருட்கள் சுவாசித்தல்.
  • – நுரையீரல் குழாய் சிறிதாக இருத்தல்.
  • – உள் நாக்கு வளர்ச்சி

அறிகுறிகள் : இருமல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல்

மருத்துவம் :

  • – சந்திர கலா லேபம்
  • – துளசி மனப்பாகு
  • – ஆடாதொடை சூரணம்
  • – கற்பூராதி தைலம்
  • – திரி கடுகு சூரணம்
  • – தூதுவலை லேகியம்

மருந்து செய்முறை :

துளசி மனப்பாகு

துளசிச்சாறு – 1 லிட்டர்
பனைவெல்லம் – 1 கிலோ
சீரகம் – 200 கிராம்
இஞ்சி – ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை

தூதுவலை லேகியம் :

தேவையான பொருட்கள் :

தூதுவலை சமூலம் (தலை முதல் கால் வரை) – டி கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில்  வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

3. நோய் : ஆஸ்துமா 

காரணங்கள் : குளிர்ந்த நீர், சுகாதாரமின்மை,

அறிகுறிகள் : இருமல், தும்மல், சளி, மூக்கில் நீர் வடிதல், மூச்சுத்திணறல், நெஞ்சில் சளி, சளி கட்டியாக இரத்தத்துடன் வருதல், மாலையில் காய்ச்சல், உடம்பு இளைத்தல்

மருத்துவம் :

  • திரி கடுகு சூரணம்
  • துளசி மனப்பாகு
  • ஆடாதொடை சூரணம்
  • தூதுவலை லேகியம்
  • சிவனார் அமிர்தம்
  • வெள்ளருக்கு குளிகை

தொகுப்பு : A. சந்தியாகு

இயற்கை சீற்றங்களும், மறுவாழ்வு பணிகளும்…

பெருமளவில் மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் அளவில்லா சேதங்களையும் பின்விளைவுகளையும் எதிர்பாராத வகையில் ஏற்படுத்தும் ஒரு சம்பவமே பேரிடர் (லிr) இயற்கை சீற்றம் எனப்படும்.

இயற்கை சீற்றங்கள் இரண்டு வகை உள்ளன.

1. இயற்கை பேரிடர்
2. மனிதரால் ஏற்படும் பேரிடர்

இயற்கை பேரிடர் :

புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, வறட்சி, ஆழிப்பேரலை (சுனாமி), இடி மின்னல் போன்றவை கடுமையான வெயில் தாக்கம், தீ விபத்து சாலை விபத்து.

மனிதனால் ஏற்படும் பேரிடர் :

சுற்றுச்சூழல் மாசுபாடு, அணுக்கதிர் வீச்சு, தீவிரவாத தாக்குதல், இனக்கலவரம், மதக்கலவரம், தொற்றுநோய், சாலை விபத்து.

நிலநடுக்கம் (பூகம்பம்)
நமது பூமியின் விட்டம் 12, 756 கி.மீ ஆகும். நடுவில் உட்கருவான ளீலிre உள்ளது. பூமியை சுற்றியுள்ள கவசத்தில் (Mantle) ஆரம் 2,700 கி.மீ இது தீக்குழம்பு (Magma) போன்று உள்ளது. இதன்மேல் வசிக்கும் பூமி தட்டின் ஓடுகள் (Crust) உள்ளது. பூமி மேல் ஓட்டின் உயரம் 25 முதல் 70 கி.மீ. வரை உள்ளது. பூமி ஒரு மணி நேரத்தில் 529.75 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. சூரியனை வினாடிக்கு 29.78 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. பூமியின் மேல் பகுதி மிகப்பெரிய 7 பூமி தட்டுகளாக உள்ளன.

  1. வட அமெரிக்கா தட்டு,
  2. தென் அமெரிக்கா தட்டு,
  3. ஆப்பிரிக்கா தட்டு,
  4. யுரேசியா தட்டு
  5. பசிபிக் தட்டு
  6. ஆஸ்திரேலியா தட்டு (இந்தியாவில் உள்ளது)
  7. அண்டார்டிகா தட்டு

நிலத்தடியில் உள்ள தட்டுக்களை கண்டத்தட்டு என்றும் சொல்லலாம். பூமி தட்டுக்கள் பல திசைகளில் நகர்கின்றன. நகர்வதால் ஒன்றை ஒன்று எதிர்த்து இடித்துக் கொள்கின்றன. இதேபோல் கண்டத் திட்டும் கடல் திட்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது நிலம் உயர்ந்து மணல் தொடர்கள் உருவாகும். கடலில் ஆழமான பள்ளம் ஏற்படலாம்.

எரிமலை :
பூமி தட்டுக்களுக்கு கீழ் உள்ள கதிரியக்க பொருட்களின் அழிவினாலும் பூமி தட்டுக்களின் முனைப்பகுதி உரசுவதாலும் அதிக வெப்பம் உருவாகி பூமி தட்டுக்களை நகரவும் வெடிக்கவும் செய்கின்றன. இது எரிமலையாகும்.

நிலநடுக்கம் :
இந்திய துணைக்கண்டமானது இந்திய நிலத்தட்டின் மேல் அமைந்துள்ளது. இந்த தட்டு வருடத்திற்கு 5 செ.மீ அளவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு யூரே´யா விளிம்பை ஒட்டியும், மேல்தட்டின் விரிசல்களை ஒட்டியும் ஆங்காங்கே நில நடுக்கம் ஏற்படுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் குஜராத், உத்ராஞ்சல், அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

சுனாமி :
ஆழ்கடலின் அடிப்பரப்பில் எந்த ஒரு இடமாவது பூகம்பத்தாலோ எரிமலை வெடிப்பினாலோ, விண் கற்கள் விழுவதாலோ பாதிக்கப்படும்போது ஏற்படும் மிகப்பெரிய கடல் அலையே ஆழிப்பேரலை சுனாமி எனப்படும். இது அடுக்குக்கடுக்கான மிக நீண்ட உச்சியுள்ள அலைகளை கொண்டு அலை தொகுப்பு ஆகும். சுனாமியின் வேகம் அது செல்லும் கடல் நீரின் ஆழத்தை பொறுத்து அமையும். பொதுவாக சுனாமி மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் 5,000 கி.மீ ஆழத்திலும் பயணம் செய்யும்.

புயல் :
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய கடற்கரை ஓரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடங்கி மேற்கே (நுr) கிழக்கே நகரும்போது அது புயலாக மாறுகிறது.

இந்தியாவின் புயல் காலம் :

  • மே முதல் ஜுன் வரை – கோடை காலம்
  • அக்டோபர் முதல் டிசம்பர் வரை – மழை காலம்

இந்திய நிலப்பரப்பில் 8 % புயல் ஆபத்து உள்ளது. இந்தியாவில் 8041 கி.மீ. கடற்கரை பகுதி உள்ளது.

புயல் வகைகள் :

  1. குறைந்த காற்றழுத்தம் காற்றின் வேகம் – 31 கி.மீ.
  2. அழுத்தம் காற்றின் வேகம் – 31- 41 கி.மீ.
  3. பேரழுத்தம் காற்றின் வேகம் – 50 – 60 கி.மீ.
  4. சுழல்காற்று (புயல்) – 62 – 78 கி.மீ.
  5. கொடுஞ்சுழல் காற்று (புயல்) – 89 – 118 கி.மீ.
  6. பெருஞ்சுழல் காற்று (புயல்) – 119 – 221 கி.மீ.
  7. மா சுழல் காற்று – 221 -க்கு மேல்

வெள்ளம் :
ஆற்று, நகர்புறம், கடற்கரை, திடீர் வெள்ளம், ஒரு குறுகிய பருவத்தில் தொடர்ச்சியாக பெய்யும் 3 – 4 மாதங்களில் பெய்யும் மழையின் அளவு 76 % மழையே வெள்ளத்திற்கு காரணம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் 40 கோடி ஹக்டேர் நிலமும் பல லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 0.45 மில்லியன் ஹக்டேர் பரப்புடைய நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கும் மாவட்டங்கள் ஆகும்.

வெள்ளத்திற்கு காரணம் :-
நிலப்பகுதியில் உள்ள தண்ணீர் ஆற்றுத்தண்ணீர் ஏதோ ஓர் ஆதாரத்திலிருந்து மேல்மட்ட நீர் வழக்கத்திற்கு மாறாகவும் வேகமாகவும் வருதல் மற்றும் மண் சேற்றின் ஓட்டம் ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் மண் சரிவு ஏற்படுதல் ஆகும்.

புவி வெப்பம் :
கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயுமண்டலம் சூடாகிறது.

ஆபத்து :

  • பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம்.
  • மழைக்குறைந்து குடிநீர் பற்றாக்குறை பஞ்சம் பட்டினி அதிகரிப்பு
  • நோய்கள் பரவுதல்

இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகள் :

  1. அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம் சீர்குலைகின்றன.
  2. நமது பெற்றோர், குழந்தைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் பாதிப்படைகிறது.
  3. தொற்றுநோய்கள் பரவுகின்றன.
  4. நமது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிப்படைகிறது.
  5. பள்ளி செல்ல முடியாமல் போய் விடுகிறது.
  6. ஆழ்ந்து கல்வி கற்கமுடியாமல் போய்விடுகிறது.
  7. மனநிலை பாதிப்படைகிறது.
  8. நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து விளையாட முடியாமல் போய்விடுகிறது.
  9. அவசர கால நிலைமைகள் ஏற்படுகிறது.
  10. பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.
  11. சாலைகள் துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு
  12. உற்பத்தி குறைவு, பொருட்களின் பற்றாக்குறை இதன் மூலம் விலைவாசி ஏற்றம்.

மறுவாழ்வு பணிகள் :

நமது ஊரில் உள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகளை கண்டறிதல்.

தண்டோரா போடுதல், தெரு முனைக்கூட்டம். வாகனப்பிரச்சாரம், உள்ளூர் கேபிள் டி.வி. ஒளிபரப்பு, ரேடியோ, துண்டு பிரச்சாரம், கிராம மின் எச்சரிக்கை தகவல் மையம், மிதவை உடை, மூடிய தகர டப்பா, ட்ரம், மரங்கள், பெரிய பிளாஸ்டிக் குடங்கள், மிதக்கும் மரங்கள் பயன்படுத்துதல்.

புயல் பாதுகாப்பு இல்லம், உயரமான கட்டிடம், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், தேவாலயம், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றின் உதவியுடன் கிராமக் குழுக்கள், நிவாரண குழுக்கள், VAO, RI, R.D.O,  தாசில்தார், மாவட்ட ஆட்சியர் தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், JRC, NCC, NSS போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

தகவல் தொகுப்பு :
A.அற்புதராஜ், ஒருங்கிணைப்பாளர்,
ஆவன காப்பு, கும்பகோணம்.