மதங்களின் பார்வையில் பெண்கள்…

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பினை நியாயப்படுத்தவும், கட்டிக் காப்பதற்கும் மட்டுமே மதங்கள் பயன்படுகிறது என்ற கருத்து சமூக சிந்தனையாளர்களிடம் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி  ஆணாதிக்க கருத்துக்களையும் மதங்கள் கொண்டுள்ளது.

இந்து மதத்தில்..

காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் பெண்களை இழிவுபடுத்தி கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ய இந்து தர்மம் “பெண்கள் வேதம் ஓதுதல் கூடாது. யாகம் செய்தல் கூடாது. துறவறம் காணவும் கூடாது. மேலும் பெண்கள் அச்சத்தின் விளைவாக பிறந்தவள் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு  அடக்கி ஆள வேண்டியவள்” என கூறுகிறது.
மனுதர்மமோ “பெண்கள் சிறு வயதில் பெற்றோரையும், முதுமையில் பிள்ளைகளையும் இளமையில் கணவனையும் சார்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
வர்ணாசிரம தர்மமோ “கர்ப்ப கிரகத்தில் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. இயற்கையான மாத விடாய் தீட்டாகும்” என கூறுகின்றது.
ஆனால் இதற்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாடுகளில் பெண்கள் சம உரிமை பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதுதானே உழைக்கும் மக்களின் தனி அம்சமாக உள்ளது.

கிறிஸ்தவ மதத்தில்…

பெண்ணால் உருவானதே பெரும்பாவமும், பெருஞ்சாபமும் ஆகும். அதனால் பெண்களை என்றும் அவர்களின் கணவன் ஆட்சி செய்வான் எனக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் 11,14 ம் அதிகாரங்களில் பெண்ணடிமை சாசனமே படைக்கப்பட்டுள்ளது.
திருச்சபை நிர்வாகத்தில் கூட ஆண்களே அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர். சமயச் சடங்குகளில் கூட பெண்கள் முன்னுரிமை பெறுவதில்லை.

முஸ்லீம் மதத்தில்…

பெண்கள் சமயக் குருக்களாக, ஆக முடியாது. தொழுகையில் பங்கு பெற முடியாது. பெண்கள் அழகையோ. அணிகலன்களையோ வெளிப்படையாக காட்டக் கூடாது. இதனால் தான் இந்திய முஸ்லீம் பெண்கள் “பர்தா” முறையினை பின்பற்றுகின்றனர்.
ஓர் ஆண் தலாக் ! தலாக் ! தலாக் ! என மூன்று முறை கூறினாலே பெண் விவாகரத்து செய்யப்படுகிறாள். ஆனால் பெண்களுக்கு இந்த உரிமையில்லை. முஸ்லீம் பெண்கள் பிற ஆடவருடன் பேசக் கூடாது என தடை செய்யப்படுகிறாள்.

வாழ்க்கையெனும் தத்துவம்

தற்போது இருக்கும் நிலையிலிருந்து தான் விரும்பும் நிலைக்கு வர முயற்சி செய்யும்போது, எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கையாகும். ‘எதிலிருந்து தொடங்குகிறது வாழ்க்கை ; எங்கு முடிகிறது’ என்ற சிந்தனை மனதில் எழும்ப வேண்டும். சிந்தனையின் உயிர்ப்பு இல்லையயனில் மனித வாழ்க்கை இறந்த நிலைக்கு ஒப்பாகும். தன்னைப்பற்றி முடிவில்லாத எண்ணற்ற சுயசிந்தனைகள் வாழ்க்கையாக பரிணமிக்கிறது. “ஒருவன் எப்படி இறந்தான் என்பதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இதைவிட அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். ஆனால் அதைப்பற்றி நாம் ஒருவரும் பேசுவதில்லை” என்கிறார் சாமுவேல் ஜான்சன். மனிதனால் பறவையைப் போன்று காற்றில் பறக்க முடியும். மீன்களைப் போன்று தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் மனிதனைப் போன்று அவனால் சில நேரங்களில் நடந்து கொள்ள முடிவதில்லை.

வாழ்க்கையில் எப்போதும் வாய்மூடி மெளனம் காக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் சில நேரங்களில் விசுவரூபம் எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முத்திரை பதிக்க முடியும், மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திடக்கூடியதாகும்.

ஒரு நேர்காணலுக்கு பல இளைஞர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் எல்லாம் வடிகட்டிப் பார்த்தபோது கடைசியாக இரண்டே இரண்டு இளைஞர்கள் மட்டும் மிஞ்சினார்கள். இருவரும் தகுதிகளைப் பொறுத்தவரையில் சரிநிகர் சமானம் பெற்றவர்களாக விளங்கினார்கள். வல்லுநர் குழு முடிவாக இருவரிடமும் ஒரே ஒரு வினாவைக் கேட்டது. உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லையயனில் எப்படி உணருவீர்கள் ? முதல் இளைஞன், “நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று பதில் சொன்னான். நீ போகலாம் என்று வல்லுநர் குழுவினர் கூறினர். இரண்டாவது இளைஞன் அதே வினாவிற்கு “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று மறுமொழி கூறினான். நீ வேலையில் சேரலாம் என்று ஒருமித்த குரலில் உடனே வேலை வாய்ப்பை வழங்கினர் வல்லுநர் குழுவினர். கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், இரண்டு இளைஞர்களும் சொன்ன வினா விடைகளில் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புலனாகும். ‘நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்’ என்று நம்பிக்கையில்லாமல் விரக்தியான ஒரு மனநிலையில் மறுமொழி சொன்னான் முதல் இளைஞன். ஆனால் இரண்டாவது இளைஞன் நம்பிக்கை ததும்பி நிற்கும் வண்ணம் எழுச்சி மிக்க மனநிலையோடு, “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்” என்று உரைத்தான்.

இந்த நிகழ்விலிருந்து நம் வாழ்வு மலர வேண்டுமென்றால், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவதிலே மாபெரும் சக்தி மறைந்திருக்கிறது. முதல் இளைஞனிடம் அவநம்பிக்கையும், உபயோகமற்ற எண்ணங்கள் இருந்ததினால் அவன் வேலை வாய்ப்பை இழந்தான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது வீடு அல்ல. வாழ்க்கை என்பது நீண்ட சாலை, அது நகரம் அல்ல. நமக்கு கிடைக்கும் இன்பங்களும், மகிழ்ச்சிகளும் சாலையில் இருக்கும் பயணியர் விடுதிகள், அங்கு நாம் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் வாழ்க்கையெனும் பயணத்தை தொடங்குகிறோம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு உரிய வாய்ப்பு கட்டாயம் வரும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது என்று கவியரசு கண்ணதாசனின் ஆசிரியர் வகுப்பில் அடிக்கடி கூறுவாராம். உண்மையில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வைர வரிகள் இவை. இன்னும் வாய்ப்பு வரவில்லையே என்று, மூடிய கதவையே பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு பக்க கதவுகள் மூடியிருந்தால் என்ன ? இன்னொரு பக்க கதவுகள் திறக்கும் ; வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலேயே  காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்காமல், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், உரிய வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் காலடி எடுத்து வைத்தால் நம் வாழ்வு மலரும் என்பது திண்ணம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எஃபில்., பி.எட்.,
விரகாலூர்

இயற்கை வேளாண்மை

உலகத்துக்கே உணவு “படைக்கும்” விவசாய மக்களுக்கு பசுமையான வணக்கம்
வானம் பேஞ்சிக் கெடுக்கும், இல்லேன்னா
காஞ்சிக் கெடுக்கும்.
இது நமது நாட்டு பழமொழி.
ஆம். காலம் தவறிய பருவமழை,  ஒரே நேரத்தில் கடும் தொடர் மழை, கடுமையான காற்று, புயல், வெள்ளம் இப்படியாக விவசாயம் பாதிக்கப்படும். அல்லது  மழையே இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போகும். இதுதான் விவசாய நிலைமை. பயிர் அறுவடை காலங்களில் தேவையில்லாமல் மழை பெய்து விவசாயி கண்ணீரோடு கடனாளியாக மாறும் நிலை தொடர் கதையாகவே உள்ளது. எனவேதான் நமது இந்திய நாட்டு விவசாய முறையை “சூதாட்டம்” என்பார்கள்.
இது இப்படி இருக்க நம்ம விவசாயிகள் விவசாயத்திற்கு அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய்கின்றனர். நவீன இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பயிர் பாதுகாப்பு, நீர், அறுவடை இப்படியாக இவைகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது. ஆனால் செலவினங்களை கணக்கிடும் போது விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் நாம் விவசாயத்தில் சுய சார்பு தன்மையை இழந்து மற்றவர்களை (உர கம்பெனி, கருவிகள்) சார்ந்து விவசாயம் செய்கின்றோம்.  மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, நீரை பாதுகாக்கும் முறைகள், (நீர் மேலாண்மை) பயிர் சுழற்சி முறைகள் இவைகள் பற்றி விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதை கற்றுக்கொடுக்க வேண்டிய வேளாண்மைத் துறையும், அரசும் கண்டு கொள்வதே இல்லை.
பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசே நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
“சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் வழியாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டு பெரும் முதலாளிகளின் வர்த்தக தளங்களாக நிலம் மாறி வருகின்றது.
எனவே பெரும் திரளாக விவசாயிகள் கூடி நமது நிலைமையை பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமது விவசாய முறையை நமக்காக மாற்றி மரபு விவசாய
முறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.
இந்த இதழில் “அமுத கரைசல்” அதாவது பயிர் ஊக்கி தயாரிப்பது பற்றி காண்போம்.
         பசுமாட்டு சாணம் 10 கிலோ
ஹோமியம் 10 லிட்டர்
வெல்லம் 2 கிலோ
தண்ணீர் 100 லிட்டர்
இவைகளை ஒரு நீர் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பெரிய கேனில் போட்டு கரைசலாக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு தடவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் கலக்கி விடவேண்டும். ஒரு நாள் கழித்து நமது கரைசலை பாசன வாய்க்காலில் லேசாக தண்ணீருடன் கலந்து பாய்ச்சலாம். கன்றுகள், காய்கறி செடிகள் இவைகளுக்கு குடிநீர் ஊற்றும்போது இக்கரைசலை கொடுக்கலாம். சொட்டுநீர் பாசனத்திலும் பாசனக் குழாய் வழியாகவும் பயிர்களுக்கு கொடுக்கலாம். இக்கரைசல் 1 ஏக்கர் நிலத்திற்கு உரியது. கடலை, நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு இக்கரைசலை பாசனம் மூலம் பயிர் ஊக்கியாக கொடுக்கலாம்.
பயன்கள் :
1. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய மூன்று சத்தும் சரிசம விகிதத்தில் பலன் கொடுக்கும். (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து)
2. மண் வளம் பெருகும். மண்புழுக்கள் மேல் நோக்கி வரும்.
3. மண்ணில் அதிகமாக பரவும். இதனால் பயிர் அடர்த்தி பெருகும்.
4. காய்ப்பு பருவத்தில் மணிகள் அதிகமாக பெருகும்.
5. பயிர்களுக்கு பயன் தரும் பூச்சிகளை வளர்க்கும்.
6. குறைந்த செலவில் பயிர்களுக்கு லாபம் தரும் ஊட்டச்சத்து (TONIC) ஆகும்.

D.A. ஜார்ஜ், ஒருங்கிணைப்பாளர்
KMSSS

தேர்தல் நேரமிது – சிந்திக்கும் காலமும் இது…!

நமது நாட்டின் 15-வது பாராளுமன்றத்தை அமைக்க வரும் மே 13 ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நேரத்தில் நாம் சிலவற்றை சிந்திப்போம்.

  1. மதசார்பின்மை என்று வெளியில் பேசிக்கொண்டாலும் சாதி, மத ரீதியாக மக்கள் உணர்வுகளை தூண்டி ஒட்டு மொத்த வங்கிகள் உருவாக்கப்படுகின்றன.
  2. கட்சிகளின் பிரிக்க முடியாத ஒன்றாக கள்ள கருப்பு பணம் உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தாலும் அளவுக்கதிகமாக கருப்பு பணம் செலவழிக்கப்படுகிறது.
  3. அண்மைக் காலங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறது.
  4. தேர்தல் வன்முறை, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
  5. ஜனநாயகம் சூதாட்டமாகவே மாறிவிட்டது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை கடத்துவது மற்றும் விலை பேசுவது, சீட்டுக்கு பசையுள்ள நபர்களா என்று பல்ஸ் பிடித்து பார்ப்பது போன்ற நாடகங்கள் மலிந்துவிட்டது.
  6. கட்சிகள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பதில்லை. தேர்தல் 
  7. காலங்களில் பொய்யான வாக்குறுதிகள், அன்பளிப்புகள், கவர்ச்சி போன்றவற்றை காட்டி ஓட்டு வேட்டை நடத்தப்படுகிறது.
  8. உறவு நேற்று ; எதிர்ப்பு இன்று என்ற நிலையில் பதவிக்காக அணி மாறும்
  9. நிலையில் உள்ளன,  ஆட்சியை பிடிக்க போட்டி போடும் அரசியல் கட்சிகள்

    சிந்திப்போம் ! வாக்களிப்போம் !
    சிறந்தோரை தேர்ந்தெடுப்போம் !
     அம்மு

    மழை நீர் சேமிப்பு

    “நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.
    அனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர். ஒரு நாட்டினுடைய வலிமையும், பெருமையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகின்றது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால் தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாக போற்றுகின்றோம். ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்க்கையை தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் அமைகின்றது.
    மழைநீர் வீணாக்கிவிடாமல் நிலத்துக்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழைநீர் சேமிப்பு எனலாம். நிலத்தடி நீர்  குறைவதை தடுக்கவும், நீர் வளத்தை பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கிறோம். மேலும் வறட்சி காலங்களில் கால்நடைகளை பராமரிக்கவும் இந்த மழை நீர் அதிகம் தேவைப்படுகிறது. பக்குவமாகச் சேமித்து சிக்கனமாக செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.

    சேமிக்கும் முறைகள் :
    பயிரிடும் முறைகளை மாற்றியும், பாசன வழிமுறைகளை மாற்றியும், நீரை பயன்படுத்துகின்ற முறையினையும் பெரிய அளவில் நீரை சேமிக்கலாம்.
    ஏரி, குளங்களை ஏற்ற முறையில் தூர் வாரி, பாதுகாத்து நீர் வழிகளை அடைக்காமல் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவன செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீரை சேமிப்பதற்கு சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை மெழுகிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டுவிடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் உள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும். கிணறுகள் இல்லாத வீடுகளில் சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரை பாய்ச்சி அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் ஆழ்குழாய்க் கிணற்றுக்குள் செலுத்தி சேமிக்கலாம்.

    பயன்கள் :
    பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர் வளத்தைப் பெருக்கலாம். இயற்கை வளங்களைப் பெருக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைப் தடுக்கலாம். இன்றைய சேமிப்பு நாளைய தேவை என்பதற்கேற்ப பருவ மழையானது பெய்யாது பொய்க்கும்போது ஏற்படுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டையும் கடும் பஞ்சத்தையும் மழை நீர் சேகரிப்பால் ஈடுகட்ட முடியும்.

    இறுதியாக :
    நம் நாடு மிகப் பெரிய வளம் நிறைந்த பூமி ஆகும். காடுகள், மலைகள், ஆறுகள், தரிசு நிலங்கள், கடல்கள், பெரிய ஏரிகள் போன்ற இயற்கை வளம் கொண்ட நம் திருநாட்டில் மழை பெய்கின்ற நாட்களில் அதனை சேமித்தால் மேற்கண்ட வளம் மேலும் பெருகும். இமயம் முதல் குமரி வரை வற்றாது வளம் சுரக்கும் பெரிய ஆறுகள் அன்று முதல் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மூலக் காரணம் மழையே.
    உயிரின் உறைவிடம் உடல். மழைநீரின் உறைவிடம் நிலம்.  எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்து சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
    விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மழைநீர் சேமிப்பில்  ஈடுபட வேண்டும். மழைநீரை சேமித்து காத்து, பக்குவமாக செலவிட்டு மண் வளம், மனித வளம் காத்து நாடு செழிக்க நாம் வளர முயற்சிகள் எடுப்போம்.

    G.மீரா,
    கங்கைகொண்டசோழபுரம் 

    போகுற போக்குல !

    அம்மா பசிக்குது
    சோறு போடுங்க
    தயவுடன் கேட்டார்
    வயதான பிச்சைக்காரர்.
    இங்க சோறுமில்ல
    ஒன்றும் இல்ல
    போய்யா என அதட்டினார்
    வீட்டுக்கார பெரியவர் !
    பிச்சைக்காரர்
    ஏக்கமுடன் நிற்க
    உள்ளிருந்து
    தாய்மையுடன் ஒரு குரல்
    இருங்க அய்யா !
    சோறுடன் வந்தாள் ‘அம்மா’
    அழுக்குப் பாத்திரத்தில்
    சோறு வாங்கி கொண்ட
    பிச்சைக்காரர்
    எங்கே அம்மா
    கூட்டு பொரியல்,  அப்பளம் என திரும்ப கேட்க,
    அம்மாவுக்கு கோபம் வந்தது,
    விக்கிற விலைவாசியில
    நீ இதையும் கேட்ப,
    இதற்கு மேலயும் கேட்ப
    போய்யா என சீறினார்.
    ஏம்மா ! விலைவாசி ஏறுனதுக்கு
    நான்தானா காரணம்
    விவரமாக சொல்லுறேன் கேட்டுக்கம்மா.
    உலகப்பொருளாதாரம் – சந்தை மயம்
    தனியார்மயம் – தாராளயமயம்
    உலக மயம் – திட்டம் பல வந்துருச்சி.
    அமெரிக்க டாலர்
    நம்ம உப்பு விலையை கூட
    உயர்த்திடுச்சு.
    பதுக்கலும் அதை
    பாதுகாக்கும் “அரசு” தாம்மா காரணம்

    தேவையில்லாத இலவசத் திட்டம்
    ஆடம்பரமான அரசு விழாக்கள்
    திட்டங்கள் வழியாக ஊழல் !
    கட்சிகளின் மாநாடு – விரயச் செலவுகள்.

    மக்களை மயக்க மானியம்
    நாட்டின் வருமானம்
    இப்படியாக வீணாகும் போது
    அதை சரிகட்ட

    அரசாங்கம் வரியைத்தான் கூட்டுவாங்க. வரிகள் ஏறும்போது
    பொருட்களின் விலை உயரும்
    என்பதுதானம்மா பொருளாதார விதி.
    இதையயல்லாம்
    யாரும்மா கேட்கிறது…
    அதனால விலைவாசி ஏற்றத்துக்கு
    ஆளும் அரசும்
    ஆளப்படும் நம் மக்களும் தானம்மா பொறுப்பு…
    இதையயல்லாம் பேச
    நீ யாருன்னு கேட்குறீங்களா ?
    நானும் இந்த நாட்டுல
    ஓட்டு போட்ட
    ஒரு பிச்சைக்கார பிரஜையம்மா…
    என பெரிய விரிவுரையாற்றி…
    நகர்ந்தார் அந்த வயதான
    பிச்சைக்காரர்
    போகுற போக்குல…
    செய்திகள் சொல்லி கொண்டே…

    G.லிண்டே, 
    கங்கைகொண்டசோழபுரம்.

    பெண்கள் நாட்டின் கண்கள்

    முன்னுரை :
    “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற நாமக்கல் கவியின் கூற்று முற்றிலும் உண்மையானது. எந்த நாடு அல்லது சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களோ அந்த சமூகமே சிறந்த சமூகமாகும். உலகில் மனிதர்கள் அனைவரையும் தனித்தனியாக தன்னால் கவனிக்க முடியாது என்பதால் தான் இறைவன் பெண்ணை படைத்தான் என்பார்கள். உண்மைதான்… அதை மெய்ப்பிக்கும் வகையில் தாய்மொழி, தாய்நாடு, கங்கை, காவிரித்தாய் என்று பெண்களை தாயாக பாவிக்கும் சமூகம் நமது பாரத சமூகமாகும்.

    சங்ககால பெண்கள் : 
    சங்க காலத்தில் அவ்வை, மாசாத்தியார், பொன்முடியார், கங்கை பாடினியார், பாரி மகளிர் என்றும் 30-க்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் ஆணுக்கு சமமாக கல்வி கற்று சமூகத்தில் உயர்நிலையில் இருந்துள்ளதை அறிகிறபோது ஆணுக்கு சமமாக பெண்கள் நடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது உறுதியானது. ஆனால் இடைக்காலத்தில் அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? பேதமை என்பது மாதர்க்கு அணிகலன் என்று கூறி அடிமையும், கொடுமையும் செய்யப்பட்டனர்.

    பெரியார், திரு.வி.க, பாரதி, முத்துலெட்சுமி, அம்பேத்கார், தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் பெண்அடிமைத் தனத்தை உடைத்தெறிந்தனர். குடத்திலிட்ட விளக்குகளாய் இருந்த பெண்களை குன்றிலிட்ட விளக்காய் ஒளிர செய்தனர். அவர்களின் சீரிய முயற்சியால் பெண்கள் தங்களின் சுய சக்தியை உணர்ந்து முன்னேற ஆரம்பித்தனர்.

    தியாகத்தின் மறு உருவம் : 
    தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்று பன்முக பரிணாமம் பெறும் பெண்கள் தியாகத்தின் மறு உருவமாக திகழ்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றக்கூடியது மட்டுமல்ல, வணங்கத்தக்கதும் ஆகும். அதனாலேயே பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் ஆதாரமாகிய நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி அழைக்கிறோம். உலகத்திலேயே மிகவும் போற்றத்தக்கதாக தாய்மையை வைத்திருக்கிறோம். அவர்களின் தியாகத்திற்கும், உழைப்பிற்கும் கைமாறு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    பெண்கள் படும் இன்னல்கள் :
    இத்தகைய புகழ்வாய்ந்த பெண்கள் பல இன்னல்களையும் சந்திக்கத்தான் செய்கின்றனர். வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை போன்றவை இந்த நூற்றாண்டிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. வரதட்சணையின் தாக்கத்தால் முதிர்கன்னிகளாக வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம். அவர்களின் துயர்களை போக்க மத்திய, மாநில அரசுகளும் வரதட்சணை தடைச்சட்டம், பாலியல் கொடுமைகள் தடைச்சட்டம், பெண் கல்வி சட்டம், சொத்துரிமை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியுள்ளது.

    இந்த சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது. பயன்பாட்டுக்கு வரவேண்டும். இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் வரதட்சணை இல்லாத திருமணங்களை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். “ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்று கவிதை வரிகளில் சொல்லியவற்றை கவிதையோடு நிறுத்திவிடாமல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் சமூகம் உயர்வானதொரு இடத்தை அடைய முடியும்.

    சாதித்த பெண்கள் : 
    ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி சாதிக்க பெண்களும் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஆண்டாள், அரசியலில் இந்திரா, அறிவியலில் கல்பனா சாவ்லா, மருத்துவத்தில் முத்துலெட்சுமி, கணிதத்தில் சகுந்தலா, சேவையில் அன்னை தெரசா, விளையாட்டில் பி.டி.உஷா, நீதித்துறையில் பாத்திமா பீவி, காவல்துறையில் கிரண்பேடி என்று இந்திய வரலாற்றில் கோலோச்சியவர்கள் ஏராளம். மேலும் பச்சேந்திரிபாய், அருந்ததிராய் போன்ற பெண்கள் பெண் இனத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தற்போது சுதந்திரம் பெற்று 60-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் தனது அயராத உழைப்பால், தன்னம்பிக்கையால் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்று இருக்கிறார் பிரதீபா பட்டீல்.

    முடிவுரை : 
    ஆகவே அனைத்துப் பெண்களும் ஆற்றல் படைத்தவர்களே, அவர்களின் ஆற்றல் வெளியுலகுக்கு தெரியாமலேயே அழிந்து போவதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அதற்கு காரணம் அவர்களின் கல்லாமையே. ஆகவே அனைத்துப் பெண்களும் கல்வி என்ற திட்டத்தை செம்மையாக செயல்படுத்த வேண்டும். பெண்கள் நாட்டின் கண்களாகும். அத்தகைய பெருமை வாய்ந்த பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாரதம் உலக அரங்கில் வீரு நடை போட முடியும்.

    – P.அருண்பிரசாத், JKM 1051

    பெண்களும், சட்டமும்

    ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களை கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்ட திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது.

    ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினர். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒருவழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக் கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப் படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? இங்கேதான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்த பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும், சட்டங்களும் பெரிதும் உதவின. பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரிமை உடையன என்று மனுநீதி கூறுகின்றது.

    ஒரு ஆண் மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்தவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது.

    சட்டமும் கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமை கலாச்சாரம் தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்கள் பெண்களுக்கு பெரிதும் எதிராகவே அமைகின்றன.

    பெண் சிசு கொலை : 
    வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக “பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம் – 1870 – ம் ஆண்டு” அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன.

    கருகலைப்பு : 
    1971-ம் ஆண்டு சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்கு மட்டுமே கருகலைப்பு செய்யலாம்.

    1. கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்போது. 
    2. பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்ற பாதிக்கப்படும்போது. 
    3. மருத்துவர் சரியயன்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ கருச்சிதைவு செய்யலாம். 

     இந்திய தண்டனைச் சட்டம் – 1860

    ஆபாசப் புத்தகம், விளக்கப் படம், ஓவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன.

    பிரிவு – 292 – இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

    பிரிவு – 292 – குறைந்த அளவு தண்டனை ஆறுமாதச் சிறைக் காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்பட்டாமல் இருத்தல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

    பிரிவு – 293 – 6 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
    பிரிவு – 294 – 3 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

    1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்தது.

    பெண்ணை அவமதித்தல் : 
    பிரிவு – 354 – ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். தண்டனை – 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே.

    கட்டாயத் திருமணம் : 
    பிரிவு – 366 – ஒரு பெண்ணைப் பலாத்காரமாக அல்லது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தல் அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். தண்டனை – 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும்.

    பிரிவு – 366 ஏ – பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை பிறருடன் கட்டாய உடல் உறவிற்கு உட்படுத்துவது அல்லது உட்படுத்தப்படுவது குற்றம். தண்டனை – 10 ஆண்டுகள் சிறைக்காவல், அபராதம்.

    விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் : 
    பிரிவு – 373 – பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை எந்த வயதிலாவது விபச்சாரத்திற்கு அல்லது முறைகேடான உடலுறவு அல்லது வேறு சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்கு பெறுவதும், தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றம். தண்டனை : 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும். இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள்.

    பலாத்காரம் : 
    பலாத்காரம் என்றால் (1) அவளுடைய விருப்பத்திற்கு மாறாக (2) அவளுடைய சம்மதமின்றி (3) ஆணோ, பெண்ணோ, நெருக்கமான ஒருவருக்கு மரணம் (அல்லது) காயம், அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தை பெற்று (4) கணவன் இல்லையயன்று தெரிந்தபோதிலும் (5) சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக் கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் (6) புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும்போது.

    பிரிவு 375 யை பயன்படுத்த வேண்டும்.

    பிரிவு 376-ன் படி குறைந்தபட்சம் 7 வருடம் முதல் ஆயுள் சிறை தண்டனை அபராதமும்.

    கீழே கொடுக்கப்பட்ட நபர்கள் :

    (1) போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
    (2) சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர் பலாத்காரம் செய்தல்.
    (3) பெண்கள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி, தம் அதிகாரத்தை பயன்படுத்தி அங்குள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
    (4) கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
    (5) 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
    (6) குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
    இவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் முதல் ஆயுட்கால சிறை காவல் தண்டனை, அபராதமும்.


    பிறர் மனை சேர்க்கை : 
    பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவருடன் உடலுறவு கொள்வது பிறர் மனை சேர்க்கை என்ற குற்றமாகும்.
    பிரிவு 467-ன்படி 5 ஆண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
    இருதார மணம் :
    இருதார மணம் என்றால் ஒரு கணவனோ, மனைவியோ முதல் திருமணம் சட்டப் பூர்வமானதாக உள்ளபோதே மறு திருமணம் செய்வது குற்றமாகும்.
    பிரிவு 494-ன்படி 7 ஆண்டு சிறைக்காவல் தண்டனையும், அபராதமும்.
    பிரிவு 498ஏ – இது 1983-ல் புகுத்தப்பட்ட பிரிவாகும்.
    கணவர் (அல்லது) கணவரின் உறவினரால் கொடுமை குற்றமாகும். தண்டனை – 3 ஆண்டு சிறைக் காவல், அபராதம்.


    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் – பிரிவு 14 
    இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும், சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர, அரசு மறுக்கக்கூடாது. பிரிவு-15 சமயம், சாதி, இனம், பால் பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும், எந்த குடி மகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது.

    P.ஆலிஸ்மேரி, 
    ஒருங்கிணைப்பாளர், திருவையாறு மண்டலம். 

    உரிமை கீதம்…

    பாரத தேசம்
    பழம் பெரும் தேசம்…
    ஆம்!
    மொழியால் – இனத்தால்
    நாம் வேறுபட்டாலும்
    இந்தியன் என்ற உணர்வில்
    அனைவரும் ஒரே இனம்…!
    அதுதான் மானுட தத்துவம்…
    ஆனால் ஏனோ…
    இயற்கையின் நன்கொடை
    ‘நீரில்’ மட்டும் பிரிவினை…
    கூட்டு குடிநீர் திட்டத்தில்
    குறுக்கே நிற்கும் சதிகாரக் கூட்டம்…
    உயிர் வாழ
    பயிர் வளர
    மண் மலர…
    உன்னத ஆற்று நீர்
    அனைவருக்கும் பொதுமை…
    எனக்கு மட்டுமே
    நீர் சொந்தம்
    இது சுயநல போக்கின்
    உச்சக் கட்டம்…
    இது நம் தேச பக்திக்கு
    வைக்கும் வேட்டு…
    ஒட்டுக் கட்சிகள்
    ஆட்சி பீடம் ஏற
    திட்டமிடும்
    அரசியல் தந்திரம்…
    அன்பு சகோதரமே
    நம்பி கெட்டது போதும்…
    நம் தேச ஒற்றுமை நூலில்
    ஒன்றாக இணைவோம்
    நதி நீர் யாவும்
    பொதுவுடைமை என
    வீரமுழக்கமிடுவோம்
    உரிமைக்கு போராடுவோம்…
    பூமி பந்து
    பொது என போற்றுவோம்


    D.A.ஜார்ஜ், KMSSS

    சிந்திக்க சில நிமிடம்

    சுதந்திட நாட்டில்
    சுவாசிக்கக் கூட சுதந்திரம் இல்லை
    ஜனநாயக நாட்டில்
    வசிப்பதர்கோர் இடமும் இல்லை
    மக்களாட்சியில் ஓட்டு போட
    உரிமை இல்லை
    வாங்கியவன் (லஞ்சம்) வாங்கியவன் களினிலே
    கேட்டவன் கேள்வி கேட்டவன்
    ஏமாற்றும் பாரினிலே.

    – பா. தேவா, மகளிர் திட்டம்.