தொழிலாளி – மேசை துடைக்கும் குழந்தை

துள்ளி சென்றே பயிலும் வயதில்

துடைக்க வந்துவிட்டான் – மேசை

துடைக்க வந்துவிட்டான் – ஐயோ !

கொல்லன் உலையாய்க் கொதிக்கும் நெஞ்சில்

கொட்டி எரித்துவிட்டான் – ஆசையைக்

குறைவறப் போக்கி விட்டான்

கண்ணைத் திறந்தே உலகைக் காட்டும்

கல்வியை இழந்துவிட்டான் – சோகக்

கதையாய் உருவெடுத்தான்

அன்னை தந்தை ஏற்றிய சுமையை

அரும்பில் சுமக்கிறான் – துயரில்

ஆழ்ந்து நெளிகின்றான்

எட்டாக் கிளையில் கிட்டாக் கனியாய்

இருக்கும் கல்வியினை – உண்டால்

இனிக்கும் நல்லமுதைத்

தொட்டுப்பிடித்துச் சுவைத்து மழைத்

துணைவருவார் யாரோ ? – இவன்

துயர்தீர்ப்பார் யாரோ ?

வி.ஜெனிட்டா

ஏழையின் இரக்கம் – (சிறுகதை)

சுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வயிற்றுக்கு உணவு. அவருக்கு ஐந்து பெண்கள். சுப்பையா கஷ்டப்பட்டு தன் ஐந்து மகள்களையும் படிக்க வைத்தார். ஒரு நாள் சுப்பையா தன் மகள்களை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூருக்குக் கூலித் தொழில் செய்ய சென்றார். அவர் மனைவி மகள்களை சித்தாள் வேலைக்குச் சென்று உணவும், பாடப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து வளர்த்து வந்தார். வெளியூருக்குச் சென்ற சுப்பையா அங்கு சுனாமியால் தன் தாய், தந்தையை இழந்து ஒரு பெண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தார். சுப்பையா வீட்டில் கஷ்டம் இருந்தும் அந்தப் பெண்ணையும் தம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். சுப்பையா தன் ஐந்து மகள்களைப் போல அந்தப் பெண்ணையும் படிக்க வைத்தார். சுப்பையா கூலி வேலை செய்துக் கஷ்டப்பட்டாலும் அந்த பெண்ணையும் தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட மனதிருப்தி அவரிடம் இருந்து, அந்த ஆறு பெண்களும் நன்றாகப் படித்து சுப்பையாவை ராஜா போல் ஆக்கினர்.

ஒரு மனிதன் சிறிய வயதில் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ பெரிய வயதில் அவ்வளவு மகிழ்ச்சியடைவான். கஷ்டப்பட்டால் மட்டும் போதாது ஒரு மனிதரிடம் இரக்கமும் இருக்க வேண்டும்.

– S. SHEEBA, JKM – 1024

மனித உரிமைகள் மீறல் என்றால் ?

ஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில் அரசோ, காவல்துறை அரசு அதிகாரிகள், வனத்துறை, ஆயுதப்படை அதிகாரி, அரசு சார்பாக ஒப்பந்தக்காரரைப் போல் செயல்படுகின்ற எவரேனும் ஒருவர் அடுத்தவரின் மனித உரிமையில் தலையிட்டோ மரியாதைக் குறைவாக நடத்துகிறார் எனில் அவைகளும், மனித உரிமைகள் மீறல்களே. மனித உரிமைகள் அரசுக்கு எதிராகவே கோரப்படுகின்றது. தனி மனிதர்களுக்கு எதிராக கோரப்படுவதில்லை. இருப்பினும் ஒரு தனி மனிதன் இன்னொருவரின் வாழ்வுரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் தொடர்பான உரிமைகளை மீறினால் பாதிக்கப்பட்டவர் அந்த உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசினை அணுக முடியும். அரசு அந்த உரிமையை மீறுவோருக்கு தண்டனை வழங்கவோ (அல்லது) தடுத்து நிறுத்தவோ தவறினால் அப்போது அது மனித உரிமை மீறலாக மாறுகிறது.

மனித உரிமை மீறலுக்கான சில வரையறைகள் :

மக்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலையால் வெளியிடப்படும் நச்சு, வேதியியல் கழிவுகள் கலக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறுவதே

வாழ்வுரிமை மீறலாகும்.

– காவலரால் சந்தேகப்பட்டு அடித்தல், விலங்கிடல் மற்றும் சித்ரவதை செய்தல் என்பன மனித மாண்பு மற்றும் உடல் பாதுகாப்புக்கு எதிரான உரிமை மீறலாகும்.

– ஒரு பெண் சிறைக் கைதி சிறைக்காப்பாளரால் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்ற புகார் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க தவறுதல் சட்டப்படி சம பாதுகாப்பளிக்கும் உரிமை மீறலாகும்.

– தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கோவிலில் வழிபட, கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கத் தடுக்கின்ற உயர் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மறுத்தல் பாகுபாடு சார்ந்த உரிமை மீறலாகும்.

வேலைத் தளங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் கொடுக்கப்படுவதையும், பணி உயர்வில் சம வாய்ப்பு கொடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு முதலாளிகளுக்கான சட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையினர் புறக்கணித்தல் சம வாய்ப்பிற்கான உரிமை மீறலாகும்.

பாதுகாப்பு படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு கடையின் சொந்தகாரருக்கு இழப்பீடு கொடுக்காமல் எடுத்துக் கொள்ளுதல். வாழ்வாதார உரிமை மீறலாகும்.

மாவட்ட நிர்வாகம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக வெளியிட மறுத்தல் செய்தி பெறும் உரிமை மீறலாகும்.

புலனாய்வுக் குழுமத்தால் முகம்மதியர் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு மதபாடங்கள் கொடுக்கப்படுவதை அவர்கள் தேச விரோதிகள் என்று காரணங்களை காட்டி மறுத்தல் மதவுரிமை மீறலாகும்.

வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காடு அழிக்கப்படுவதையும், சட்டத்திற்குப்புறம்பாக மரங்கள் வெட்டப்படுவதையும் கட்டுப்படுத்த இயலாதிருந்தால் சுற்றுச்சூழல் உரிமை மீறலாகும்.

அரசு என்பது மத்திய மாநில அரசுகளையும் மேலும் நாட்டை நிர்வகிக்க உதவுகின்ற நிறுவனங்கள் முகவாண்மைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்து மக்களையும் குறிக்கும். மாவட்ட ஆட்சி அலுவலர்கள் ஊராட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், நகராட்சி, அஞ்சல்துறை, மின்சாரத்துறை, அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான அரசின் கட்டுப்பாட்டிற்குள்ள குழுக்கள் அனைத்துமே அரசின் அங்கமாகவே குறிக்கப்படும்.

தகவல் தொகுப்பு :
A.ஆலீஸ்மேரி

பாலின நிகர்நிலை

பாலினம் என்றால் பெண்கள், பெண்கள் மேம்பாடு போன்றவற்றை மையப்படுத்துவது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பாலினம் என்பது ஆண்கள், பெண்கள் மத்திய சமூக, கலாச்சார வரையறையாகும். இது உழைப்பு, சந்தை, குடும்பம், அரசியல் கட்டமைப்பு போன்றவற்றில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே வெளிப்படும் உறவு கட்டமைப்பின் வேறுபாட்டை வெளிப்படுத்தும் ஒரு கருத்து கருவியாகும்.

பாலினம் என்ற கருத்தாக்கத்தை விவரிப்பு நிலை, பகுப்பாய்வு நிலை என்ற 2 மட்டங்களில் விவாதிக்கலாம்.

1. விவரிப்பு நிலை :
விவரிப்பு நிலை ஆணுக்கும், பெண்ணுக்குமிடையேயான பால் வேறுபாட்டை குறிப்பது. அத்துடன் சமூக வேறுபாடுகள், வர்க்கம், சாதி, இனம், மதம், வயது, தொழில் மட்டுமல்லாமல், கால மாறுதலால் ஏற்படும் மாறுபாடுகளை விவரிப்பதாகும். மேலும் பாலினம் என்ற கருத்தாக்கம் சமூக ரீதியாக வரையறுக்கப்பட்டதால் அதனை மாற்றியமைக்க முடியும்.

2. பகுப்பாய்வு நிலை (Analytical)
பாலின முறைமையினால் தாக்கம் பெறுகின்ற ஆண், பெண் அடையாளங்கள், அதிகாரங்கள், அதிகார உறவுகள், வளங்கள் அவற்றை கட்டுப்படுத்துதல், அதனால் பெறும் பலன்கள் ஆகியவற்றை இனங்காணவும் ஆய்வு செய்யவும் நமக்கு வழியேற்படுத்துகிற தத்துவ மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையே பகுப்பாய்வு நிலை. மேற்கூறிய 2 கோணங்களிலும் பாலினத்தை பார்க்க வேண்டும்.

உழைப்பின் பாலின பிரிவினை :
ஆணும், பெண்ணும் என்ன செய்ய தகுதி உடையவர்கள் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் நிலவும் சமூக கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுப்பட்ட பொறுப்பு, கடமைகளை பிரித்தளிப்பதையே உழைப்பின் பாலின பிரிவினை என்று சொல்லப்படுகின்றது. இது 3 வகையாக பிரிக்கப்படுகின்றது.

உற்பத்தி உழைப்பு : (Productive Work)
நுகர்வுக்கும், வியாபாரத்திற்குமான பண்டங்களையும் சேவைளையும் (விவசாயம், மீன் பிடித்தல், சொந்த தொழில்) உற்பத்தி செய்வதும், குறிப்பாக சம்பளம் அளிக்கப்படும் வேலை அல்லது வருமானத்தை உற்பத்தி செய்பவை உற்பத்தி உழைப்பில் அடங்கும். ஆணும், பெண்ணும் உற்பத்தி உழைப்பில் ஈடுபட்டாலும் பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் பாத்திரமும், பொறுப்பும் மாறுபட்டிருக்கும். பெண்களின் உற்பத்தி உழைப்பு ஆண்களின் உற்பத்தி உழைப்பை விட குறைவான அளவுக்கே புலப்படக்கூடியதாகவும் குறைவாக மதிப்பிடக் கூடியதாகவும் உள்ளன.

மறு உற்பத்தி உழைப்பு : (Reproductive Work)
மறு உற்பத்தி உழைப்பு என்பது 2 விதத்தில் பார்க்கப்படுகிறது. உடலியல் மறு உற்பத்தி (Biological Work) உழைப்பு என்பது குழந்தையை கருவில் சுமப்பது, பெற்றெடுத்து பாலூட்டுவது, வளர்ப்பது போன்றவற்றை குறிக்கும். மற்றும் சமூக மறு உற்பத்தி (Social reproductive) உழைப்பு என்பது உணவு தயாரிப்பு, தண்ணீர் பிடிப்பது, விறகு கொண்டுவருவது வேலைகள் மற்றும் பராமரிப்பு, குடும்ப ஆரோக்கியம் போன்ற குடும்ப வேலைகள் மற்றும் பராமரிப்பு அடங்கும். மனித குலத்தின் இருப்புக்கு மறு உற்பத்தி பணி மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் மறு உற்பத்தி உழைப்பு மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுவதாகவும், அதிக நேரம் பிடிப்பதாகவும் இருந்த போதும் இது முக்கியமானதாக கருதப்படுவதில்லை. இது பெரும்பான்மையாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் பொறுப்பாகவே இருக்கிறது.

சமூக உழைப்பு (Community Work)
சமூக உழைப்பு என்பது திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், சமூக முன்னேற்ற செயல்பாடுகள் (ரோடு, மின்வசதி, பன்ளிக்கூடம், ரே­ன் கடை, சுகாதாரம்) குழுக்களிலும், அமைப்புகளிலும் பங்கெடுப்பது, உள்ளூர், அரசியல் செயல்பாடுகள் இன்னும் இது போன்ற சமூக நிகழ்வுகளை கூட்டாக செயல்படுத்துவதாகும். சமூகங்களை பற்றிய பொருளாதார ஆய்வில் இது போன்ற உழைப்பு ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூக செயல்பாட்டிற்கு தன்னார்வ உழைப்பு கணிசமாக செலவிடப்படுகிறது. அது சமூகத்தின் ஆன்மீக, பண்பாட்டு வளர்ச்சிக்கும், சுய நிர்ணயத்திற்கும் மிகவும் அவசியமாகும்.

மேற்கூறிய பாலின உழைப்பு பிரிவினையை கணக்கிட்டால் (24 மணி நேரத்தில் ஆண் செய்யும் வேலைகளையும், பெண் செய்யும் வேலைகளையும் பட்டியலிடுதல்) பெண்கள் செய்யும் வேலைகள் பெரிதாக கணக்கிடப்படாத நிலை விளங்கும். ஆணின் உழைப்பும், பெண்ணின் உழைப்பும் சமமாக மதிப்பிடப்படுவதில்லை. சமமாக பிரதிபலன் பெறுவதில்லை என்பதால் பாலின உழைப்பு பிரிவினை சமனற்ற நிலைக்கும், மேல் கீழ் அதிகார கட்டமைப்புக்கும் இட்டு செல்கிறது

தொகுப்பு :
S.மரியசகாயமேரி
CCO, கும்பகோணம்

மூலிகை மருத்துவம் – செய்முறை விளக்கம்

கடந்த இதழில் மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விவரங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இம்மாத இதழில் கிராமபுறங்களில் எளிதாக பரவும் நோய்கள் பற்றியும் அதற்குரிய காரணங்கள் பற்றியும், அறிகுறிகள் பற்றியும் தீர்விற்கான மருத்துவம் பற்றியும் மேலும் மருந்து செய்முறை பற்றியும் இவ்விதழில் காண்போம்.

மருந்துகளின் வகைப்பாடு :
சித்தமருத்துவத்தில் 64 வகையான மருந்துகள் உண்டு.

32 உள் மருந்து

32 வெளி மருந்து

சூரணம் : (பொடி செய்தல்) சூரணம் என்பது மூலிகையின் இலை, தண்டு, பூ, வேர், காய், கனி போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர காயம் (துணியால் சளிப்பது) செய்ய வேண்டும். இது 6 மாதங்கள் வன்மையுடன் இருக்கும்.

தைலம் : மூலிகை சாற்றில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் கலந்து கொள்வது (பல முறை காய்ச்சுதல் என்பது காய்ந்து கொண்டிருக்கும் தைலத்தை ஒரு குச்சியில் எடுத்து அனலில் காட்டினால் சொட, சொட என சத்தம் கேட்கும்.  தைலம் ஒரு வருடம் வன்மையுடன் இருக்கும்.

மனப்பாகு : மனப்பாகு என்பது மூலிகை சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி தேன் பதத்தில் இறக்கி பத்திரப்படுத்தி பயன்படுத்துவது 3 மாதம் வன்மையுடன் இருக்கும்.

லேகியம் : லேகியம் என்பது மூலிகைகளுடன் மருந்து பொருட்களும், சர்க்கரையும் சேர்த்து காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் இறக்கி தேன் அல்லது நெய் சேர்த்து இறக்கி பயன்படுத்துவது (கம்பி பதம் என்பது காய்ந்து கொண்டிருக்கும் லேகியத்தை கரண்டி அல்லது கையில் எடுத்தால் கம்பி போல வரும்)

செந்தூரம் : செந்தூரம் என்பது பாசானம் மற்றும் உலோகங்களை மூலிகை சாறுடன் சேர்த்து செந்நிறம் காணும் வரை எரித்து பொடி செய்து வைத்துக் கொள்வது. 500 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

பஸ்பம் : பஸ்பம் என்பது பாசானம் அல்லது உலோகங்களை மூலிகை சாறில் அரைத்து வில்லை செய்து மண் சீலை செய்து காயவைத்து மருந்தின் அளவிற்கேற்ப விராட்டி புடமிட்டு எடுக்க வேண்டும்.

இது 900 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

குறிப்பு : 

  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தனியாக சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் ஒரு அரிசி எடை அளவுதான் சாப்பிடவேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தீராத வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கை நீலக்கலரில் மாறினால் தீராத வியாதி என்பதாகும்.

கசாயம் : கசாயம் என்பது உலர்ந்த மூலிகை சரக்குகளை இடித்து நீர் விட்டு 8-ல் 1 பங்காக காய்ச்சி வடிகட்டி எடுப்பது. 3 மணி நேரம் வன்மையுடன் இருக்கும்.

கிராமங்களில் பரவும் பொதுவான நோய்கள் :
காலரா, அம்மை, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, கக்குவான் இருமல், சோகை, அக்கி, சிரங்கு, வாந்தி, பேதி, மூலம், புற்றுநோய், தொழுநோய், தலைவலி, பல் வலி, காது வலி, கண் வலி, விரல் சுத்தி, கட்டிகள், காசநோய், ஆஸ்த்துமா, குடல் புண், மூட்டு வலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, தேமல், வாதநோய், வயிற்று வலி, மாரடைப்பு, கர்ப்பப்பை கோளாறு, நெஞ்சு வலி, தொண்டையில் சதை வளர்தல் (டான்சில்) கால் ஆணி, பித்த வெடிப்பு, பொடுகு, குடற்புழு.

1. நோய் – வயிற்றுப்போக்கு

காரணங்கள் :

  • – ஜீரணமின்மை,
  • – எண்ணெய் பதார்த்தங்கள்,
  • – நெய், எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது
  • – மாவு பண்டங்கள்,
  • – காரமான உணவு,
  • – அதிக கண் விழிப்பு,
  • – அதிக பிரயாணம்

அறிகுறிகள் : வயிற்றுக் கடுப்பு, வயிறு இறைச்சல், வாந்தி, வாய் குமட்டல், புளிச்ச ஏப்பம், வாந்தி வருவது போல் உணர்வு, மலத்துடன் சளி, இரத்தம், சிறுநீரைக் கட்டுப்படுத்தும், காது அடைத்தல், கண் சரியாக தெரியாமை.

மருத்துவம் : காட்டாத்திப்பூ சூரணம் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

மருந்து செய்முறை :

காட்டாத்திப்பூ சூரணம் தேவையானவை :
காட்டாத்தி பூ ¼ கிலோ
ஓமம் ¼ கிலோ

ஓமத்தை லேசாக வறுத்து இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்ய வேண்டும்.

காட்டாத்திபூவை இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி தேன் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

2. நோய் :  சளி, இருமல்

காரணங்கள் :

  • – குளிர்ந்த தண்ணீர் குடித்தல்.
  • – குடிநீர் மாறுபடுதல்.
  • – இரசாயன பொருட்கள் சுவாசித்தல்.
  • – நுரையீரல் குழாய் சிறிதாக இருத்தல்.
  • – உள் நாக்கு வளர்ச்சி

அறிகுறிகள் : இருமல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல்

மருத்துவம் :

  • – சந்திர கலா லேபம்
  • – துளசி மனப்பாகு
  • – ஆடாதொடை சூரணம்
  • – கற்பூராதி தைலம்
  • – திரி கடுகு சூரணம்
  • – தூதுவலை லேகியம்

மருந்து செய்முறை :

துளசி மனப்பாகு

துளசிச்சாறு – 1 லிட்டர்
பனைவெல்லம் – 1 கிலோ
சீரகம் – 200 கிராம்
இஞ்சி – ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை

தூதுவலை லேகியம் :

தேவையான பொருட்கள் :

தூதுவலை சமூலம் (தலை முதல் கால் வரை) – டி கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில்  வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

3. நோய் : ஆஸ்துமா 

காரணங்கள் : குளிர்ந்த நீர், சுகாதாரமின்மை,

அறிகுறிகள் : இருமல், தும்மல், சளி, மூக்கில் நீர் வடிதல், மூச்சுத்திணறல், நெஞ்சில் சளி, சளி கட்டியாக இரத்தத்துடன் வருதல், மாலையில் காய்ச்சல், உடம்பு இளைத்தல்

மருத்துவம் :

  • திரி கடுகு சூரணம்
  • துளசி மனப்பாகு
  • ஆடாதொடை சூரணம்
  • தூதுவலை லேகியம்
  • சிவனார் அமிர்தம்
  • வெள்ளருக்கு குளிகை

தொகுப்பு : A. சந்தியாகு

இயற்கை சீற்றங்களும், மறுவாழ்வு பணிகளும்…

பெருமளவில் மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் அளவில்லா சேதங்களையும் பின்விளைவுகளையும் எதிர்பாராத வகையில் ஏற்படுத்தும் ஒரு சம்பவமே பேரிடர் (லிr) இயற்கை சீற்றம் எனப்படும்.

இயற்கை சீற்றங்கள் இரண்டு வகை உள்ளன.

1. இயற்கை பேரிடர்
2. மனிதரால் ஏற்படும் பேரிடர்

இயற்கை பேரிடர் :

புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, வறட்சி, ஆழிப்பேரலை (சுனாமி), இடி மின்னல் போன்றவை கடுமையான வெயில் தாக்கம், தீ விபத்து சாலை விபத்து.

மனிதனால் ஏற்படும் பேரிடர் :

சுற்றுச்சூழல் மாசுபாடு, அணுக்கதிர் வீச்சு, தீவிரவாத தாக்குதல், இனக்கலவரம், மதக்கலவரம், தொற்றுநோய், சாலை விபத்து.

நிலநடுக்கம் (பூகம்பம்)
நமது பூமியின் விட்டம் 12, 756 கி.மீ ஆகும். நடுவில் உட்கருவான ளீலிre உள்ளது. பூமியை சுற்றியுள்ள கவசத்தில் (Mantle) ஆரம் 2,700 கி.மீ இது தீக்குழம்பு (Magma) போன்று உள்ளது. இதன்மேல் வசிக்கும் பூமி தட்டின் ஓடுகள் (Crust) உள்ளது. பூமி மேல் ஓட்டின் உயரம் 25 முதல் 70 கி.மீ. வரை உள்ளது. பூமி ஒரு மணி நேரத்தில் 529.75 கி.மீ. வேகத்தில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. சூரியனை வினாடிக்கு 29.78 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. பூமியின் மேல் பகுதி மிகப்பெரிய 7 பூமி தட்டுகளாக உள்ளன.

  1. வட அமெரிக்கா தட்டு,
  2. தென் அமெரிக்கா தட்டு,
  3. ஆப்பிரிக்கா தட்டு,
  4. யுரேசியா தட்டு
  5. பசிபிக் தட்டு
  6. ஆஸ்திரேலியா தட்டு (இந்தியாவில் உள்ளது)
  7. அண்டார்டிகா தட்டு

நிலத்தடியில் உள்ள தட்டுக்களை கண்டத்தட்டு என்றும் சொல்லலாம். பூமி தட்டுக்கள் பல திசைகளில் நகர்கின்றன. நகர்வதால் ஒன்றை ஒன்று எதிர்த்து இடித்துக் கொள்கின்றன. இதேபோல் கண்டத் திட்டும் கடல் திட்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது நிலம் உயர்ந்து மணல் தொடர்கள் உருவாகும். கடலில் ஆழமான பள்ளம் ஏற்படலாம்.

எரிமலை :
பூமி தட்டுக்களுக்கு கீழ் உள்ள கதிரியக்க பொருட்களின் அழிவினாலும் பூமி தட்டுக்களின் முனைப்பகுதி உரசுவதாலும் அதிக வெப்பம் உருவாகி பூமி தட்டுக்களை நகரவும் வெடிக்கவும் செய்கின்றன. இது எரிமலையாகும்.

நிலநடுக்கம் :
இந்திய துணைக்கண்டமானது இந்திய நிலத்தட்டின் மேல் அமைந்துள்ளது. இந்த தட்டு வருடத்திற்கு 5 செ.மீ அளவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு யூரே´யா விளிம்பை ஒட்டியும், மேல்தட்டின் விரிசல்களை ஒட்டியும் ஆங்காங்கே நில நடுக்கம் ஏற்படுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் குஜராத், உத்ராஞ்சல், அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

சுனாமி :
ஆழ்கடலின் அடிப்பரப்பில் எந்த ஒரு இடமாவது பூகம்பத்தாலோ எரிமலை வெடிப்பினாலோ, விண் கற்கள் விழுவதாலோ பாதிக்கப்படும்போது ஏற்படும் மிகப்பெரிய கடல் அலையே ஆழிப்பேரலை சுனாமி எனப்படும். இது அடுக்குக்கடுக்கான மிக நீண்ட உச்சியுள்ள அலைகளை கொண்டு அலை தொகுப்பு ஆகும். சுனாமியின் வேகம் அது செல்லும் கடல் நீரின் ஆழத்தை பொறுத்து அமையும். பொதுவாக சுனாமி மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் 5,000 கி.மீ ஆழத்திலும் பயணம் செய்யும்.

புயல் :
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய கடற்கரை ஓரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடங்கி மேற்கே (நுr) கிழக்கே நகரும்போது அது புயலாக மாறுகிறது.

இந்தியாவின் புயல் காலம் :

  • மே முதல் ஜுன் வரை – கோடை காலம்
  • அக்டோபர் முதல் டிசம்பர் வரை – மழை காலம்

இந்திய நிலப்பரப்பில் 8 % புயல் ஆபத்து உள்ளது. இந்தியாவில் 8041 கி.மீ. கடற்கரை பகுதி உள்ளது.

புயல் வகைகள் :

  1. குறைந்த காற்றழுத்தம் காற்றின் வேகம் – 31 கி.மீ.
  2. அழுத்தம் காற்றின் வேகம் – 31- 41 கி.மீ.
  3. பேரழுத்தம் காற்றின் வேகம் – 50 – 60 கி.மீ.
  4. சுழல்காற்று (புயல்) – 62 – 78 கி.மீ.
  5. கொடுஞ்சுழல் காற்று (புயல்) – 89 – 118 கி.மீ.
  6. பெருஞ்சுழல் காற்று (புயல்) – 119 – 221 கி.மீ.
  7. மா சுழல் காற்று – 221 -க்கு மேல்

வெள்ளம் :
ஆற்று, நகர்புறம், கடற்கரை, திடீர் வெள்ளம், ஒரு குறுகிய பருவத்தில் தொடர்ச்சியாக பெய்யும் 3 – 4 மாதங்களில் பெய்யும் மழையின் அளவு 76 % மழையே வெள்ளத்திற்கு காரணம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் 40 கோடி ஹக்டேர் நிலமும் பல லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 0.45 மில்லியன் ஹக்டேர் பரப்புடைய நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கும் மாவட்டங்கள் ஆகும்.

வெள்ளத்திற்கு காரணம் :-
நிலப்பகுதியில் உள்ள தண்ணீர் ஆற்றுத்தண்ணீர் ஏதோ ஓர் ஆதாரத்திலிருந்து மேல்மட்ட நீர் வழக்கத்திற்கு மாறாகவும் வேகமாகவும் வருதல் மற்றும் மண் சேற்றின் ஓட்டம் ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் மண் சரிவு ஏற்படுதல் ஆகும்.

புவி வெப்பம் :
கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயுமண்டலம் சூடாகிறது.

ஆபத்து :

  • பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம்.
  • மழைக்குறைந்து குடிநீர் பற்றாக்குறை பஞ்சம் பட்டினி அதிகரிப்பு
  • நோய்கள் பரவுதல்

இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகள் :

  1. அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம் சீர்குலைகின்றன.
  2. நமது பெற்றோர், குழந்தைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் பாதிப்படைகிறது.
  3. தொற்றுநோய்கள் பரவுகின்றன.
  4. நமது மக்களின் அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிப்படைகிறது.
  5. பள்ளி செல்ல முடியாமல் போய் விடுகிறது.
  6. ஆழ்ந்து கல்வி கற்கமுடியாமல் போய்விடுகிறது.
  7. மனநிலை பாதிப்படைகிறது.
  8. நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து விளையாட முடியாமல் போய்விடுகிறது.
  9. அவசர கால நிலைமைகள் ஏற்படுகிறது.
  10. பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.
  11. சாலைகள் துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு
  12. உற்பத்தி குறைவு, பொருட்களின் பற்றாக்குறை இதன் மூலம் விலைவாசி ஏற்றம்.

மறுவாழ்வு பணிகள் :

நமது ஊரில் உள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகளை கண்டறிதல்.

தண்டோரா போடுதல், தெரு முனைக்கூட்டம். வாகனப்பிரச்சாரம், உள்ளூர் கேபிள் டி.வி. ஒளிபரப்பு, ரேடியோ, துண்டு பிரச்சாரம், கிராம மின் எச்சரிக்கை தகவல் மையம், மிதவை உடை, மூடிய தகர டப்பா, ட்ரம், மரங்கள், பெரிய பிளாஸ்டிக் குடங்கள், மிதக்கும் மரங்கள் பயன்படுத்துதல்.

புயல் பாதுகாப்பு இல்லம், உயரமான கட்டிடம், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், தேவாலயம், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றின் உதவியுடன் கிராமக் குழுக்கள், நிவாரண குழுக்கள், VAO, RI, R.D.O,  தாசில்தார், மாவட்ட ஆட்சியர் தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், JRC, NCC, NSS போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

தகவல் தொகுப்பு :
A.அற்புதராஜ், ஒருங்கிணைப்பாளர்,
ஆவன காப்பு, கும்பகோணம்.

சுற்றுச் சூழலைக் காப்போம்

ஒன்பது கோள்களும் ஒன்றான “பூமி” அண்ட வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. மற்ற எந்த கோள்களுக்கும் இல்லாத பலசிறப்பு அம்சங்களை குறிப்பாக உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற அற்புதமான சூழலைப் பெற்றுள்ளது. ஆனால் பூமியின் நலமும், வளமும், சூழலும் குன்றிக் கொண்டே இருக்கின்றது. வளிமண்டலத்தில் காற்று, நீர், நிலம் மாசு காரணமாக உயிரினங்கள் அனைத்தும் தாமாகவே அழியும் நிலை உருவாகியுள்ளது. வானிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரித்துள்ளது. சோலை வனங்கள் அனைத்தும் பாலைவனங்களாக மாறியுள்ளன. கோடிக்கணக்கான உயிரினங்களில் ஓர் உயிரினம் தான் மனிதன். இம் மனிதன் பூமியில் மற்றும் வளிமண்டலத்தில் கிடைக்கக் கூடிய இயற்கைப் பொருட்களை கைவசப்படுத்திவிட்டான். மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு 90 விழுக்காடுக்குமேல் தன்னைச் சார்ந்த இயற்கைச் செல்வத்தை அழித்து விட்டான். மனிதன் செய்த அனைத்து இயற்கை அழிவுகளும் சமன்படுத்தப்படவேண்டும்.

‘பாரதநாடு பழம் பெரும் நாடு’ என்ற புகழுக்கேற்ப நம் நாடு பழமை வாய்ந்த நாடு. நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவையே இதற்குத் தக்க சான்று. நமது இந்தியத் துணைக் கண்டம் உருவாகி பல கோடிக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு பழமை வாய்ந்த, இயற்கை வளம் நிறைந்த நம் இந்திய நாட்டில் தான் சூழல் சீர்கேடுகள் நிறைய இருக்கின்றன. தொழிற்புரட்சி என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. மனித சமூகமின்றி இயற்கை தனித்து வாழும். ஆனால் இயற்கையின்றி மனித சமூகம் வாழ முடியாது.

உலக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு, முப்பது கோடி பேர் உடல்நிலை அவதி உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நவீன வீட்டு உபயோகச் சாதனங்களால் கரியமில வாயு நிறைய வெளிப்படுகிறது. இதனால் பூமி சூடாகி வானிலை மாற்றமும் சூழல் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

ஆண்டு ஒன்றுக்கு 800 கோடி டன் வளமான மண் கடலிலே கரைந்து வீணாகின்றது. கால வெள்ளத்தில் பாறைகள் பொடிந்து, பொடிந்து மண் மலர்ந்தது, இம்மண் மலர்ச்சிக்கு அணை போட்டால், மண்ணாக மாறும் செயல் தடைபடும். உருவான மண் கரைந்து வெளியேறும். நிலமானது நிலைத்து நிற்குமே தவிர வளமான மண் இராது. நவீன வேளாண்முறைகளால், விவசாயத்திற்கு ஆதாரமான நிலம், நீர் மற்றும் இடு பொருட்களான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், புது இரக விதைகள் இவற்றால் மண் வளம் குன்றிவிட்டது. மண் அரிப்பு, உவர்ப்பு, களர் ஆதல் போன்ற பல வழிகளில் மண்ணின் இயல்பான தன்மையில் மாறுபாடுகள் பல ஏற்பட்டுள்ளன. இன்றைய நகர் மயமாதல், தொழில் நுட்பம் போன்ற இவற்றால்

ஆண்டிற்குச் சராசரியாக 0.8 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடு நிலப்பரப்பை நிரந்திரமாக நாம் இழந்து வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் ‘உலக பூமி நாள்’ கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்று ‘உலகளவில் நினை உனதளவில் செயல்படு’ (Think Globally Act Globally) என்ற கூர் வார்த்தைக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை பூமியிலிருந்து நம்மால் விரட்ட இயலும். நமது சுற்றுப் புறங்களில் வீணான காகிதங்களை மறு சுழற்சிக்கு அனுப்ப உதவ வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு இணைந்த பொருட்களை உற்பத்தி செய்ய வலியுறுத்த வேண்டும். கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது துணிப்பைகள், சணலால் ஆன பைகன், உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் அபாயத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

‘அன்னை பூமி, நமக்கென்ன செய்தது என்று கேட்காதே

அன்னை பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்’.

என்கிறார் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி. நாம் வாழும் இந்த செழுமையான பூமியை பிறர் (நமது சந்ததியினர்) வாழ சிறப்பான இடமாக விட்டுச் செல்ல வேண்டும்.

மனவுறுதியும், சேவை மனப்பான்மையும் நிரம்ப பெற்ற நாம் நம்முடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இப்பூமியின் சுற்றுச் சூழல் நலம் காக்க ‘இயற்கை சக்தி’களை நாம் மாசு படுத்தக் கூடாது. இயற்கையும், சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையுமென உணர்ந்து நாம் சுற்றுச் சூழல் காக்க மரம் நடுதலை நம்மூர்களில் உள்ள மக்களுக்கு ஊக்குவித்து மரம் நடுதல் பணியை நாமும் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகளை (நெகிழிப்பைகள்) முடிந்தவரை உபயோனப் படுத்தாமல் இருத்தல் வேண்டும். நம் வாழ்க்கையில் மேற்கூறியவற்றை செயல்படுத்துவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியை வாழ விடலாம். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அழகிய உலகினை விட்டுச் செல்லாலம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எம்.ஃபில், பி.எட்.,
விரகாலூர்

உலக வெப்பமாதலைத் தடுப்போம் ! (Global Warming Awareness)

மக்களே விழித்தெழுங்கள் ! புவி வெப்பமயமாதலை தடுங்கள் !!

இயற்கை சூழல் மாற்றத்தினால் நம் நாடு அதிக அளவில் பாதிக்கப்படும்.

இயற்கை மாற்றத்திற்கான காரணங்கள்

  • வளிமண்டல வாயுக்கள்
  • தொழிற்சாலை மற்றும் அணுமின் நிலைய கழிவுகள்
  • பெருகி வரும் மக்கள் தொகை
  • நிலக்கரி உலைகள், எரிசக்தி, எண்ணெய் உலைகள்
  • வாகன உற்பத்தி பெருக்கம்

இயற்கை சீர்கேடுகள் :

  • சூறாவளி
  • வெள்ளம், பஞ்சம்
  • ஓசோன் ஓட்டை
  • பனிப்பாறை உருகுதல்
  • கடல் நீர் மட்டம் உயர்வு
  • கோடை மழை குறைவு
  • கரியமில வாயு அதிகரிப்பு

வெப்பமயமாதல்

  • விவசாய பாதிப்பு
  • நீர் நிலைகளில் தண்ணீர் குறையும்
  • காடுகள் அழியும், விலங்குகள் பாதிக்கும்.
  • மழை குறையும், தொடர் விவசாயம் செய்ய முடியாது.
  • ஏழ்மையை உண்டாக்கும்.
  • சமுதாய சீர்கேடுகள் உண்டாகும்
  • புற்றுநோய், சரும வியாதிகள்,
  • கண் வியாதிகள் தோன்றும்.
  • அலர்ஜி, ஆஸ்துமா உண்டாகும்.
  • எதிர்காலம் பற்றி கேள்விக்குறியாக உள்ளது.
  • சத்தான உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
  • உழைப்பாளர் வர்க்கம் பாதிக்கப்படும்

தடுப்பு முறைகள் :

  • சூரிய ஒளி வெப்பத்தை சக்தியாக மாற்றுதல்
  • குளிரூட்டியை மிதமாக உபயோகப்படுத்துதல்
  • துணிப்பை பயன்பாட்டினை கையாளுதல்
  • நாகரீகம் என்ற பெயரில் இயற்கையை கெடுக்க வேண்டாம்
  • USE CFLs intead of Bulbs
  • மரம் நடுதல்

செய்யப்பட வேண்டியவைகள்:

  • Drive Less
  • Switch off : mobile Charger, computer if not used
  • குழல் பல்பை பயன்படுத்துவோம்
  • வாஷிங் மெஷினில் ஒரே நேரத்தில் துணியை துவைத்தெடுப்போம்.
  • கொடி கயிற்றில் துணியை உலர்த்துவோம்.
  • பொதுத்துறை பேருந்துகளில் பயணிப்போம்

மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !!

“மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.

“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. “நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

“ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு”

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

“பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்”

உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க.

தொகுப்பு : குடந்தை அல்ஃபி

சிறப்பு பொருளாதார மண்டலம்

தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்.

சித்தரிப்பு :
“இன்னொரு உலகம் சாத்தியம்” என்று போராடி வரும் வேளையில் உலகமயமும் அதன் இயல்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தினை ‘புதியதோர் உலகமாக’ சித்தரித்து கொண்டுள்ளது.

இந்த பொருளாதார மண்டலம் யாருடைய நலனுக்காக ? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது ? இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது ? என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உண்மையான சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்திய நிலை :
2005 நவம்பர் மாதம் மாண்புமிகு பாரத பிரதமரால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் ! இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுவது என்னவென்றால் “நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது ; அதற்கான சர்வதேச அளவில் மண்டலங்களை அமைப்பது” என கூறப்படுகிறது மேலும் “வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது” என ஆசையாயும் கூறுகின்றது.

இதற்காக நமது மத்திய அரசின் வர்த்தக துறை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் 128 நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்திய அளவில் 304 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் அரசு அசுர வேகத்தில் திட்டம் தீட்டியுள்ளது.

பங்குதாரர்கள் :
அரசினால் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தினை அமைக்கப் போவது யார் ? வேறு யாருமல்ல நமது பங்காளிகள் ! ரிலையன்ஸ், டாடா, சஹாரா, யுனிடெக், வீடியோகான், மகிந்திரா, கல்யாணி குழுமம் போன்ற நிறுவனங்கள்தான் !

ஏரி நிறைந்தால் கரை கசியும்

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் முதல் 35 ஆயிரம் ஏக்கர் நிலம் வரை நிலம் கையகப்படுத்தலாம் என்ற செய்தியும் நம்மைப் போன்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளாய் அமைகின்றது. மும்பையில் ரிலையன்நிறுவனம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இம்மண்டலத்தை அமைத்துள்ளது. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரியது என கூறப்படுகின்றது.

“இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது. இந்தியா பல லட்சம் கிராமங்களை உள்ளடக்கியது” என்றார் மகாத்மா காந்தி அவரது வழி வந்தவர்கள் அவரது சிந்தனைக்கு சமாதி கட்டிக் கொண்டு வருகின்றனர். நன்செய் நிலம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு நிலக்கொள்ளை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இம்மண்டலத்தினால் நகர நெருக்கடி ஏற்பட்டு சமூக பதட்டமும் உருவாகின்றது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இது பற்றி கூறும்போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என்றார்.

உணவு பற்றாக்குறை :
ஆம் ! இது வரை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 67 சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒரு லட்சத்து 34 ஆயிரம் யஹக்டேர் நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 74 ஆயிரம் யஹக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது இது தான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது.

இச்சிறப்பு பொருளாதார மண்டலம் ஆசீர்வதிக்கப்பட்ட நவீன காலனியாதிக்கமாக செயல்பட்டு வருகின்றது.

ஏகாதிபத்ய தாராளம் :

  • இம்மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. 
  • இப்பொருட்களுக்கு பூரண வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. 
  • முதல் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி விலக்கு உண்டு.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்.
  • அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறு முதலீடு என்ற பெயரில் சலுகை நீடிப்பு செய்யப்படும்.
  • “ஏழை அழத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்”
  • இம்மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு எவ்வித வரியும் கிடையாது.

சட்ட விலக்கு :

பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உள்ளிட்ட 27 வகைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர் வேலை, காண்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும் எட்டு மணி நேர வேலை பாதுகாப்பு மருத்துவ பாதுகாப்பு என சட்ட ரீதியான எந்த பாதுகாப்பும் இம்மண்டலத்தில் செல்லுபடியாகாது.

அரசுக்கு இழப்பு :
அரசின் இச்சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையினால் அரசுக்கு
ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறையே அறிவித்துள்ளது. இது ஒரு எச்சரிக்கை மணியாகவும் அரசுக்கு உள்ளது. ஆனால் அரசு இம்மண்டலத்தின் மூலம் எதிர்பார்க்கும் மூலதனம் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி மட்டுமே என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

வேலை ஏய்ப்பு :
வர்த்தகத்துறை இம்மண்டலத்தின் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும் என அறிவித்தது. ஆனால் 2006 வரை செயல்பட்டு வரும் 28 சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 5 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக மிகக் குறைந்த 1 லட்சத்து 650 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கேரளா – கொச்சினில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 7 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.

தொழிற்பேட்டைகள் அம்போ :
அந்நிய முதலீடு என்ற பெயரில் இம்மண்டலம் ஒரு கேள்விக்குறியாக அமையப்பெற்றுள்ளது. இதனால் மாநில அரசுகளால் ஆங்காங்கே துவக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை அரசு சட்டை செய்வதில்லை. தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளில் சாலை, மின்சார வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அம்பத்தூர் பேட்டையினை சீரமைத்தால் மட்டும் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 1 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கலாம். எனவே அரசு வேலை வாய்ப்பினை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், இதுபோன்ற பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளை வடிவமைத்துள்ளது.

ரியல் எஸ்டேட் :
சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்கும் நிறுவனங்கள் தாங்கள் கையகப்படுத்தும் நிலங்களில் 25 சதவீதத்தில் தொழிற்சாலையும் 25 சதவீத இடத்தில் சாலை, மின்சாரம் குடிநீர் உள்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதியுள்ள 50 சதவீத இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு உருவாக்கி கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்கள் வரி இல்லாமலே ரியல் எஸ்டேட் பிசினசெய்ய அரசே வழிவகை செய்துள்ளது.

மாநில அரசும் அம்போ :
இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளை சாரும். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி அதிகாரிகளுக்கு தான் இம்மண்டலத்தினை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு பொருளாதார மண்டலம் அரசுக்குள் அரசாக ; குறிப்பாக செல்வம் விளையாடும் அரசாக செயல்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

கடந்த கால வரலாறு :
இப்படித்தான் இந்திய அரசு இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. பனியன் தொழிற்சாலைகள், தோல் பொருள் உற்பத்தி, இறால் மீன் வளர்ப்பு என்று கூறி நாசப்படுத்தியது போதாது என்று இன்று சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகின்றது. விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை தந்து இத்திட்டம் நிறைவேற்றலாம் என கூறப்படுகின்றது. ஆனால் இது கூட தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்ற மறுப்பதுதான். இத்திட்டத்தின் உள்ள தொழிற்சாலைகள் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு அவற்றோடு நமது சிறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும்.

சீனாவில்
மேலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். சீனாவில் இத்திட்டம் 1986-ல் தொடங்கப்பட்டது. அங்கு லாயக்கற்ற தரிசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசே இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. இதற்கு
“காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்”
கையகப்படுத்தப்படும் நிலங்கள் அரசுக்கே சொந்தமானது. முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு பின்பு மற்ற நிறுவனங்களைப் போன்று வரி விதிக்கப்படுகின்றது. இம்மண்டலத்திற்காக நிலம் வழங்கும் அனைவரும் பங்குதாரராக ஏற்றுக்கொள்ளப்பட்டு லாபம் தரப்படுகின்றது. இதன் மூலம் அந்நாடு 12 % பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா – சீனாவினை ஒப்பிட்டு பாருங்கள். இங்கோ கிராமப்புறம் திவாலாகி, விவசாயிகள் நிர்கதிக்கு ஆளாகும் சூழ்நிலை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தால் உருவாகியுள்ளது.

அரசிடம் எதிர்பார்ப்பு :
எனவே இம்மண்டலம் அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை உருவாக்கப்பட வேண்டும்.
நிலம் விலை குறித்து அனைத்து தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
நிலம் தொழிற்பேட்டையாக மாறுகின்றபோது நிலத்தை சார்ந்திருக்கின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று எழுந்துள்ளது. எனவே இதனை கிளர்ச்சி உருவாக்குவதன் மூலமே மாற்றங்களை நாம் உருவாக்க முடியும்.

செய்யுங்கள் :
இம்மண்டலத்திற்கு எதிராய் நாம் செய்ய வேண்டியது என்ன ?

  1. விவசாயத்தினை அடிப்படையாக கொண்டு அதனை வளர்க்கும் சேவை செய்யும் தொழிற்துறை அமைக்க நமது அரசுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
  2. நமது மரபு சார்ந்த விவசாய முறைகளை கடைபிடித்து நாம் நிம்மதியாக வாழ அரசை எதிர்த்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
  3. வணிக நலன்களை கட்டிக் காக்கும் சுய உதவிக்குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்திப்பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை உருவாக்கும் விதமாக தெரு, வார்டு, கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் குழுக்களே நிர்வகிக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கலாம் என அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
  4. எந்த தொழிலினை தொடங்கவும் அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்கும் மக்களை மய்யப்படுத்தும் “அதிகார மய்யம்” உருவாக்க அரசை கேட்க வேண்டும்.

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்