இளைய சூரியனே….

உன் கண்ணீரைத் துடைப்பதற்கு
கரங்களை தேடாதே !
உன்னுள் கனலை மூட்டினால்
உனக்கு முளைத்திடும்

ஆயிரம் கரங்கள் !
உன் கவலைகளைச்
சிந்தனை நெருப்பினால் சுட்டெறி !

நீ வாழப் பிறந்தவன்
வீழ்வதற்கல்ல…

உன் சூரிய விழிகளை திற
இருட்டுக் கூட்டத்தினை
இடம் தெரியாமல் எரித்திடு !

நண்பா..
நினைவில் வை
இளைய சூரியனே நீதான்

கனவு என்பது
காலை வரை
ஆனால் உன் நினைவு
கல்லறை வரை

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !
காயம்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயப்படுத்தாதே

என் உயிர் தோழி !
பூவை விட்டு பிரியாத ஒளி போல
என் மனதை விட்டு பிரியாத

உன் நினைவு என்றுமே வேணும்.

ஜாக்குலின் மேரி

வாழ்வில் வசந்தம் காண…

1. மகிழ்ச்சி :
“அன்பு செய்ய ஓர் ஆளும்
செயல்பட ஒரு பணியும்
எதிர்பார்ப்புக்கொரு இலக்கும்
மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவைகளாம்.”   இமானுவேல் காண்ட்

மகிழ்ச்சி என்பது வாழ்வில் ஏற்படும் ஆனந்தம், இன்பம், நிறைவு என பல பொருளில் கூறலாம். மனிதவாழ்வில் ஒவ்வொரு ஜீவனும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றன. மகிழ்ச்சியை தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே மகிழ்வைத் தேடும் படலத்தில் மனித குலம் வெற்றி பெற்றுள்ளதா ? என்கிறபோது சரியான பதிலை கூற முடியாமல் நின்று விடுகிறது.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தேடுகிறோமே ; எங்கு கிடைக்கிறது ? என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். முடியுமா ? இது என்ன பொருளா ? விலை கொடுத்து வாங்குவதற்கு. அது ஓர் இனம்புரியாத உணர்வு. அதை வெளியே தேடிச்செல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தேட வேண்டும். “மகிழ்ச்சி சூழ்நிலைகளால் வருவதில்லை, உள்ளத்தால் ஏற்படுவதுண்டு. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் மகிழ்வடையச் செய்வதில்லை. உள்ளத்தில் இருந்து வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும், நாம் எது எது வைத்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி ஏற்படாது, எப்படி அதனைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது” என்கிறார் ய­ய்க் என்ற அறிஞர். ஆகவே மகிழ்ச்சியை நமது உள்ளத்தில்தான் தேட வேண்டும் என்பது புலனாகிறது.

தேர்வினில் வெற்றி பெற்று மாநில அளவில் முதல்வனாக வரும்பொழுது பெரிதும் மகிழ்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் மகிழ்கின்றனர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துவிட்டால் மகிழ்கின்றனர். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்து நல்ல விலைக்கு விற்றால் மகிழ்கின்றனர். இப்படியாக எல்லோரும் ஏதாவது ஒன்றில் மகிழ்கின்றனர். இது போதுமானதா ? இது நிறைவை தந்துவிடுமா ? இது நிரந்தரமானதா ? இல்லை. அப்படியயனில் நிரந்தர மகிழ்ச்சியை எப்படி உருவாக்க முடியும் ?. நிரந்தர மகிழ்ச்சி என்றால் துன்பமே இல்லை என்பதல்ல. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஆனால் துன்பத்தை களைந்து இன்பத்தில் எப்படி வாழ்வது என்பதில்தான் வாழ்வு அடங்கியிருக்கிறது. ஆகவே நிம்மதியை தருகின்ற நிறைவை தருகின்ற மகிழ்ச்சியை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவோம்.

ஒரு புகழ் வாய்ந்த அரசன் வசதிகள் அனைத்தும் நிரம்ப பெற்றிருந்தான். ஆனால் மனதில் மகிழ்ச்சி இல்லை. அவையில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டான். சரியான விடை கிடைக்கவில்லை. ஆகவே ஒரு முனிவரிடம் கேட்டான். அதற்கு அம்முனிவர் ‘மகிழ்ச்சியாக வாழும் ஒருவரின் மேலாடையை ஒரு நாள் முழுவதும் நீ அணிந்திருக்க வேண்டும்’ என்றார். படை வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பவனை கண்டுபிடிக்க ஆணை பிறப்பித்தான். படை வீரர்கள் எத்திசையிலும் தேடியும் எவனும் கிடைக்காமல் வருத்தத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வரும்பொழுது மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த பிச்சைக்காரனைக் கண்டனர். அவனிடம் விவரம் சொல்லி அவனது மேலாடையை கொண்டு வந்தனர். அந்த மேலாடையில் பல ஓட்டைகளும், தையல்களும் இருந்தன. பின் பக்கத்தில் பாதி துணியே இல்லை.

ஆம், மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, பட்டம், செல்வங்கள் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக உள்ளதை உள்ளவாறு ஏற்று நிறைவடையும் நல்ல மனம் மட்டும் தேவை என்பதை அப்பிச்சைக்காரன் உணர்த்தினான். மகிழ்ச்சி சிறிய சிறிய நற்செயல்களால் உருவாகும். அதாவது ஆதரவு வார்த்தைகளால், இறக்கம் கொண்ட செயல்களால், பிறரைப் புண்படுத்தாமல், பிறருக்காக சிறிது நேரம் ஒதுக்குவதால், பிறரின் துயரத்திற்கு செவிமடுப்பதால், நல்ல ஆலோசனை வழங்குவதால் ஆகிய இவைபோன்ற செயல்களால் மகிழ்ச்சி உருவாகும். இப்படிபட்ட பண்புகளை வாழ்வில் வளர்த்துக்கொள்வோம்.

ஒரு மனிதனின் முகம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். எனவேதான் மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரிக்கின்றோம். துயரத்தில் இருக்கும் போது சோகமாக இருக்கின்றோம். கோபத்தில் இருக்கும்போது இறுக்கமாக இருக்கின்றோம். மகிழ்ச்சி வெளிப்படுத்தும் சிரிப்பை கடவுள் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார். எனவேதான் பெரியவர்கள் “சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோயில்” என்பார்கள். ஏனெனில் சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தாங்கி நிற்கிறது. சிரிப்பு உடலுக்கு ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே மகிழ்ச்சியை தமதாக்கிக் கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும்.

“பகிர்ந்து வாழும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது” என்பார்கள். எனவே நமது மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கவேண்டுமானால் நாம் பிறர் நல செயல்களில்
ஆர்வம் காட்டவேண்டும். பிறரது துயரத்தில் பங்கேற்கும்பொழுது, இருப்பதை பிறரோடு பகிரும்போது, திறந்த மனநிலையோடு பேசும்பொழுது, ஆதரவு
வார்த்தைகள் கூறும்பொழுது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம். அம்மகிழ்வில் பங்கு பெறுகிறோம்.
இன்றைய எதார்த்த நிலை என்ன ? சோர்ந்து போன முகத்துடன் நடக்கின்றனர் பலர். நடை பிணங்களாக வாழ்கின்றனர் சிலர். விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டனர் இன்னும் சிலர். துயரத்தையே வாழ்வாக்கிக் கொண்டனர் பலர். ஏன் நிரந்தர நோயாளியாகவே மாறிவிட்டனர் பலர். காரணம் மகிழ்ச்சி இல்லை. இவர்களிடம் பதவி, பணம், பலம், அதிகாரம், அந்தஸ்து இருக்கின்றது. ஆனால் அன்பு செய்ய ஆள் இல்லை. எனவேதான் சூம்பிய வாழ்வை கொண்டுள்ளனர். எனவே அன்புக்கு அயலான் இருக்க வேண்டும். அவனோடு வாழ்வை பகிரவேண்டும். அப்போதுதான் மகிழ்வை நிரந்தரமாக்க முடியும்.

மெர்லின் மன்றோ ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகை அதிக பணம் சம்பாதித்ததால் மக்கள் அவளை புகழ்ந்தார்கள். திரை உலகம் அவளுக்கு பல புதிய வாய்ப்புகளை அளித்தது. அவளை கண்டு உலகம் மகிழ்ந்தது. ஆனால் அவளது உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை. ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தன்னையே அழித்துக்கொண்டாள். உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்த நடிகை, மகிழ்ச்சியை மட்டும் அனுபவிக்க முடியவில்லை. காரணம் அவளை அன்பு செய்ய ஆள் இல்லை. பகிரும் மனம் அவளிடம் இல்லை. உள்ளத்து உணர்வுகளை பகிர ஆள் இல்லை. விளைவு மரணத்தை தழுவிக்கொண்டாள். பகிரும் பொழுது மனம் மகிழ்கிறது. இதைத்தான் இறைவனும் விரும்புகிறார்.

மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ள, துன்பங்களை, துயரங்களை வேதனைகளை, வருத்தங்களை, விரக்திகளை களைந்து மகிழ்ச்சி கொள்ள சில வழிகள் :

* மனதை ஒழுங்குபடுத்த யோகா செய்யுங்கள்.
* இதமான இசையைக் கேளுங்கள்.
*      இயற்கையை ரசித்து பாருங்கள்
* குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
* பிள்ளைகளோடு விளையாடுங்கள்
* இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்.
இவை அனைத்தையும்விட
* அயலானோடு பகிர்ந்து அன்பு செய்யுங்கள்.
* பிறர் நல்ல செயல்களை பாராட்டுங்கள்.
* எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
* மனம் சற்று கனமாக இருந்தால் நீங்கள் நம்புகிற ஒருவரிடம் பகிர்ந்து தன்னம்பிக்கை பெறுங்கள்.
(வசந்தம் காண வழிகள் மேலும் தொடரும்…)

கிறிஸ்தும நற்செய்தி

தச்சனைக்கு பிள்ளையயன்றும் தாயயாருத்தி கன்னியயன்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமாரா !
என்ற கண்ணதாசன் வைர வரிகள் இயேசுவின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றது. கடவுள் மனிதராக மனுவுரு எடுத்தார் என்ற உண்மைக்கு எடுக்கும் விழா கிறிஸ்து பிறப்பு விழா. கடவுளுக்கு மனிதனுக்கும் இடையே அமைந்த உறவு விழா, கடவுள் மனிதர் ஆனார், நமக்காக ஏழையானார். இது மனிதனுக்கு வாழ்வு வழங்கும் விழா.
இது குழந்தைக்குயயடுக்கும் விழா. “ஒவ்வொரு குழந்தை பிறப்பும் கடவுள் இவ்வுலகின்மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை என்பதன் அடையாளம்” – கவி இரவிந்தர்நாத் தாகூர். கடவுள் குழந்தையாக வருகிறார் என்பது இது நிறைவேறுகிறது. மண்ணுலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் நம்பிக்கை துளிகள்.
இது பகிர்வுக்கு எடுக்கும் விழா. கடவுள் மக்களின் விடுதலைக்காக மகனை கொடுத்தார். மகன் தனது மக்களுக்கு தன்னை கொடுத்தார்.
பணக்காரன் : சகோதரா நான் உன்னை நேசிக்கிறேன்.
ஏழை : நீயாவது என்னை நேசிப்பதாவது. நீ உண்டு குடித்து கும்மாளம் அடிக்கிறாய். நானே வேலைக்கு உணவுயின்றி தவிக்கிறேன். நீ அடுக்கு மாடிக்கு மேல் நிற்கிறாய். நானோ வீடுகூட இன்றி தவிக்கிறேன். நீயாவது என்னை நேசிப்பாதாவது.

பணக்காரன் : இல்லை என்னை நம்பு. நான் உன்னை உண்மையாகவே நேசிக்கிறேன். 
ஏழை : நீ நேசிப்பதாக இருந்தால் நீ கீழே என் நிலைக்குவா. அல்லது என்னை உன் நிலைமைக்கு உயர்த்து
பணக்காரன் : அது கஷ்டம். கொஞ்சம் பிச்சை போடுகிறேன்.
ஏழை : பிச்சையும் எனக்கு தேவையில்லை, நீ அன்பு செய்வதையும் நான் 
நம்பதயாராகயில்லை.
பணக்காரன் : ஏன் நம்ம மாட்டாய்.
ஏழை : அன்பு இருக்கும் இடத்தில் வெறும் பிச்சையில்லை, சகோதர பகிர்வு 
இருக்கும், சம மகத்துவம் இருக்கும், தோழமை இருக்கும், தன்னிழப்பு இருக்கும்.
இந்த கிறிஸ்துவ பிறப்பு விழா அர்த்தம் பெறவேண்டுமெனில் ஏழைகள் வாழ்வுபெற, அடிமைகள் விடுதலைப் பெற பகிர்வோம். மகிழ்வோம்.

அன்பு மொழி கற்றிடலாம்

அ, ஆ என்றே என்றே சொல்லி

அன்பு மொழி கற்றிடுவோம்

இ, ஈ என்றே சொல்லி

ஈகைத்திறனை வளர்த்திடுவோம் !

உ, ஊ என்றே சொல்லி

ஊக்கம் தன்னை பெருக்கிடுவோம் !

எ, ஏ என்றே சொல்லி

ஏற்றம் கொண்டு வாழ்ந்திடுவோம் !

ஐ சொல்லி என்றே சொல்லி

ஐயம் தன்னை விரட்டிடுவோம்

ஒ, ஓ என்றே சொல்லி

ஒற்றுமையை உணர்த்திடுவோம் !

ஒள என்றே சொல்லி

ஒளவை வாக்கை காத்திடுவோம் !

ஃ என்றே சொல்லி

எஃகு மனிதராய் வாழ்ந்திடுவோம் !

A. நோயல் மேரி
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்.
புள்ளம்பாடி, VDV – 1080

தேனியின் தேடல்

வெற்றி

தேனைச் சேமிக்கிறது

தேடலால் தேனிக்கு வெற்றி

ஆனால்

நண்பனே ! உனக்கு

வெற்றி ஒன்றில்லை

ஆர்வத்துடன் பார்த்து

ஆவேசத்துடன் படித்து

சுறுசுறுப்பாய் எழுதினால்

என்றும் புன்னகைக் காலம்

ஒற்றுமையாய் நாம் தேடிய

வெற்றியுடன்

அலையின் ஆர்வம்

கரையைத் தொடுகிறது

ஆர்வத்தால் அலைக்கு வெற்றி

புயலின் ஆவேசம்

பூமியை மாற்றுகிறது

ஆவேசத்தால் புயலுக்கு வெற்றி

எறும்பின் சுறுசுறுப்பு

விரைவில் செல்கிறது

சுறுசுறுப்பால் எறும்பிற்கு வெற்றி

பூவின் புன்னகை

அனைவரையும் கவர்கிறது

புன்னகையினால் பூவிற்கு வெற்றி

காகத்தின் ஒற்றுமை

வேடனுக்கு ஏமாற்றம்

ஒற்றுமையால் காகத்திற்கு வெற்றி.


M.சுஜாதா
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்
புள்ளம்பாடி. MKT- 1037

எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விளக்கங்கள்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தார் போலக் கெடும்

எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :

எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired – A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune – I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency – D குறைத்துவிடுதல்

Syndrome – S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?

எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

எய்ட்ஸ் நோய் பரவும் விதம் :

எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.

  1. உடல் உறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது “வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்”
  2. எய்ட்ஸ் வைரஉள்ளவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து, ஊசி குழல் சரியாக சுத்தம் செய்யப்படாமல் மற்றவருக்கு பயன்படுத்தும்போது
  3. இக்கிருமி உள்ளவர் இரத்தத்தை பிறருக்கு செலுத்தும்போது
  4. இவ்வைரஉள்ள தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுவிட்டால் இன்று அதற்கான சிகிச்சை கிடையாது / மருந்து கிடையாது.

மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ளவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய அபாயமுள்ளவர்கள் :

  1. பால்வினை நோய்க்கு ஆளானவர்கள்
  2. பிறப்பு உறுப்பில் புண்களை உடையவர்கள்,
  3. பல்வேறு நபர்களோடு உடலுறவு கொள்பவர்கள், 
  4. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள், 
  5. போதை பொருட்களை உபயோகிப்பவர்கள்.

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?

1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, 2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, 3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், 4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது

எய்ட்ஸ் நோய் எதனால் பரவாது ?

  1. எச்.ஐ.வி.பாதித்த நபருடன் கை குலுக்குவதால், 
  2. காற்று, நீர் போன்றவற்றால்,
  3. கொசு மூலம், 
  4. இந்நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடுவதால்

ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் :

நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆற்றுப்படுத்துதலும், இரத்தப்பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆலோசனை விவரங்களும், பரிசோதனை முடிவுகளும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசோதனை முடிவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் என்று தெரியவந்தால் ஆற்றுப்படுத்துதலும், அவர்கள் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

எச்.ஐ.வி.உள்ள கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி.இல்லாத குழந்தையைப் பெற முடியுமா? முடியும்.

கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் நெவிரப்பின் என்ற மாத்திரை கொடுப்பதாலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தை எடைக்கு தகுந்தாற்போல் ஒரு கிலோவிற்கு 2.மி.கி. நெவிரப்பின் மருந்து கொடுப்பதாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி.பரவுவதை தடுக்க முடியும். இந்த வசதி அனைத்து அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளது. இங்கு இவர்களுக்கு எச்.ஐ.வி.இல்லாத குழந்தையை பெற்றெடுக்க ஆலோசனையும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே மக்கள் அனைவரும் இந்நோய் பற்றி உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.

எய்ட்ஸ்  வருமுன் யோசி ! வந்தபின்பும் வாழ்வை நேசி !!

கவிதை

மானாக இருந்தால்

குதித்து வந்து பார்ப்பேன்

மயிலாக இருந்தால்

ஆடி வந்து பார்ப்பேன்

ஆனால் !

நான் மனிதனாக உள்ளேன்

என் அன்பு எப்பொழுதும்

உங்களை பார்த்துக்கொண்டிருக்கும்.

M.அனுசுயா
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்
JKM – 1053