பொங்கல்
நாடு நினைத்ததெலாம் நன்கு தொழிற்படுத்தி
தோடவிழ்த்துச் செம்பரிதி பொன்வெயில் தூவுகின்றான்
வீடுமலி பொங்கல் விழாப்பாடி வாழ்த்துவோமே! – பாரதிதாசன்.
போகிப் பொங்கல் :- பழையன கழிதலும், புதியன புகுதலும்
அன்று : வீடு மற்றும் வீதியையும் சுத்தம் செய்து களஞ்சியத்தில் புதிய நெல்லைச் சேர்க்க பழைய நெல்லை எடுத்துவிட்டு சுத்தம் செய்வர். மார்கழியோடு துயரங்களும் கழியும் என்று தை மகளை வரவேற்க தயார் செய்வர். இன்று : வீட்டுக் கழிவுகளோடு பிளாஸ்டிக் மற்றும் டயர்களை முயன்று சேகரித்து நண்பர்களையயல்லாம் ஒன்றுகூடி கொளுத்தி மகிழ்வது. விளைவு : சுற்றுச்சூழல் சீர்கேடு, சுவாச நோய்கள்.
தைப் பொங்கல் :-
உழவே தலை என்றுணர்ந்த பண்டைத் தமிழர் தைத் திங்கள் முதல் நாளை உழவர் தினமாகக் கொண்டாடினர். விளைச்சலைத் தந்த பூமித்தாயையும், ஆதாரமாக விளங்கிய நீரையும், வானின்று வளம் பெருக்கிய கதிரவனையும் நன்றியோடு வணங்கி மகிழும் நாள் பொங்கல் திருநாள்.
அன்று :
உலகு நலன்காண உழவன் விதைத்து
கதிரடித்து செந்நெல் களம் சேர்த்து
ஊர்கூடி ஓரிடத்தில் உரல் சேர்த்து
உலக்கைப் பாடலோடு உயர்நெல்லைத் தீட்டி
கோலமிட்ட வாசலில் புதுப்பானை வைத்து
பாலோடு புத்தரிசி ஏலம் வெல்லம்
நெய்யிட்டு பொங்கல் சமைத்து
பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு ஆர்ப்பரித்து
மஞ்சள், இஞ்சி, கரும்புடன் அமிழ்தன்னை பொங்கல் வைத்து
என்றும் இளமை மாறா இளம்பரியைப் போற்றி வணங்கினர்
உறவோடு விருந்துண்டு உளமகிழும்
உவகைத் திருநாள் தைத்திருநாள்.
இன்று :
வாசற் பொங்கலெல்லாம்
வரலாற்றுப் பாடமாச்சி
முற்றத்துப் பொங்கலுக்கும்
முற்றுப்புள்ளி வச்சாச்சி – எங்கள் நகரிலே குக்கரிலே பொங்கலாச்சி
குலவை சத்தம் மாறிப்போச்சி
விசில் சத்தம் வந்தாச்சி
வீடெங்கும் (பொங்கல்) மணமாச்சி
வீட்டிலுள்ள நாம் மட்டும்
விருந்துண்ணும் நிலையாச்சி.
மாட்டுப் பொங்கல் :-
கழனி அமைப்பது முதல் களம் நிறைப்பது வரை உறுதுணையாய் விளங்கிவரும் மாடுகளுக்கெல்லாம் மாச்சிறப்பு செய்யும் நாள் மாட்டுப் பொங்கல்.
மங்கா மகிழ்ச்சியோடு மாடு கன்று கழுவி
கொம்பு சீவி, வண்ணம் தீட்டி
மாலையிட்டு பொங்கல் ஊட்டி
வீதிவரை விரட்டி ஓட்டி
மாக்களோடு மக்களுமாய்
மகிழ்ந்து கொண்டாடி
செய்நன்றி மறவாத தமிழர்தம் பண்பை
தெரிவிக்கும் திருநாள் மாட்டுப் பொங்கல்.
கன்னிப் பொங்கல் :-
அறம் பொருள் இன்பத்தோடு வீரத்தின்
விளைநிலமும் தமிழர்தம் திருநிலமே
என்றுணர்ந்த நாள் இந்நாள்
(மறவர்) திறம் வளர்த்திடும் திருநாள்
இதை கணூப் பொங்கல், காணும் பொங்கல் என்றும் தற்போது அழைக்கின்றனர். திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
பகையோடு புகையையும் நீக்கி
புதிய போகி படைத்திடுவோம்
இடையில் வந்த முறையை மாற்றி
இயற்கையோடு வாழ்ந்திடுவோம்
இனிய பொங்கல் படைத்திடுவோம்
இன்பத் திருநாள் வாழ்த்துக்கள்.
– ஜெ.ஜெகந்நாதன்
புத்தாண்டை நோக்கி…
ஒவ்வொரு ஆண்டும் நமக்கு புத்தாண்டுதான்
ஆனால் நமக்குள்ளே
சாதியமும் மாறவில்லை
சமத்துவமும் பிறக்கவில்லை
அன்று
அரசர்கள் பதவிக்காக பல உயிர்களை கொன்றனர்
இன்று
அரசியல்வாதிகள் பதவிக்காக பல உயிர்களை கொல்கின்றனர்
மனிதனே! மாண்டது போதும்
மாறுவோம் இனியாவது மாறுவோம்
இப் புத்தாண்டு முதல்
இறைவனின் அருளோடும்
மனித மான்போடும் ஒற்றுமையாய் வாழ்வோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்…
P.தேவா, KMSSS, (MT)
மண்ணுக்கு வந்த விண்ணகம் (கிறிஸ்துமஸ் செய்தி)
இயேசுவின் பிறப்பு நம்மையயல்லாம் ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் “அன்பின் திரு நிகழ்வு”. இந்நிகழ்வின் நிலையை சற்று நோக்குவோமானால் கருணை இயேசுவின் தாயுள்ள பாசம் நன்கு புலப்படும். ஆம் சகோதரமே ! இயேசுவின் பிறப்பு நேரம் நட்ட நடு இரவு சாமம். மக்களும் மாக்களும் அனைத்தும் கண்ணயரும் நேரம் நமக்கு சிறிதளவும் சங்கடங்கள் ஏற்படுத்தாமல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உத்தம தேவன் மாட்டடையும் தீவணத் தொட்டிலில் பிறந்தார் என்றால் நம்மை எத்தகைய அளவிற்கு மரியாதை செய்து மாண்பை கொடுத்திருக்கின்றார் என்பதை திட்டவட்டமாக நன்கு புலப்படுகிறது.
இயேசுவின் பிறப்பு நிகழ்விலே நாம் கற்றுக்கொண்ட பாடமாக, பிறரை மதித்து ‘பிறர் வளர; தான் குறுக’ என்ற தாரக மந்திரத்தை ஏற்று வாழ முன்வருவோம். ஒவ்வொரு மனிதனும் மனுசியும் இறைசாயலே என்பதைப் புரிந்து கொண்டு இயேசுவின் பாணியிலே அன்பு வாழ்க்கை வாழ்ந்து நமக்குள் இருக்கும் இழிநிலையை வேரறுப்போம். அன்புக்கு புது வடிவம் கொடுப்போம். அவ்வாறு வாழ்ந்தால்தான் நம் வாழ்வு இனிமையாகும். இல்லையேல் நம் வாழ்வு முற்றிலும் “தனிமை” வாழ்வாகி காய்ந்த மரமாக பயனற்றுப் போகும்.
மேலும், இன்றைய விழா நமக்கெல்லாம் விடுக்கும் செய்தி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் இயற்கையை நேசிப்பதும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பிலே அன்பு விருந்தாளிகளாய் இருந்தவர்கள் ஆடு, மாடு, கழுதைகள் மற்றும் அங்கிருந்த இயற்கைச் சூழல்கள், மலைகள், குன்றுகள் இவையாவும் இயேசுவின் பிறப்பிலே அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. இயேசுவின் மேல் நேசம், பாசம் கொண்ட நாம் நமது சுற்றுப்புறங்களைப் பாதுகாத்து இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம். ஆணும் பெண்ணும் இணைந்த மனித வாழ்வில் நமக்குள் இருக்கும் முரண்பாடுகள், வேறுபாடுகள் அத்தனையையும்களைய முற்படுவோம். ஏனென்றால் நம்முடைய வேறுப்பட்ட கலாச்சார சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட இறைமகன் இயேசு தம் பிறப்பினால் நம்மை தனது புனித நிலைக்கு உயர்த்தியுள்ளார். மனு உரு எடுத்தல் என்பது நம் அன்பு மக்களை பாவங்களில் இருந்து மீட்கின்றார் என்பதாகும். கடவுள் நம்மை அவர்தம் சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கு, தம் ஒரே மகனையே பெண்ணிடமிருந்து பிறக்கச்செய்கின்றார். கல்வாரிப்பலிக்கு முழுமையாய் கையளிக்கின்றார்.
கிறிஸ்துமஸ் விழா என்பது மனிதன் தான் இருக்கும் நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு அருளின் நிலையை அடைந்துள்ளான் என்பதாகும். இந்த உயரிய நிலையில் என்றும் வாழ்ந்திட நம்மை அழைக்கும் கிறிஸ்துமஸ் விழா – மனிதர்களை புனிதர்களை நிலைக்கு உயர்த்திய உன்னத நாள்.
இந்நாளின் பொருளை உணர்ந்த நாம் நம் ஆயன் வழிநின்று தாயன்பை தந்து வாழ்வோம். பூமியில் புதல்வர், புதல்வியாய் புண்ணியம் சேர்ப்போம்! புறக்கணிக்கப்பட்ட பூபாலனாய் மண்ணில் உதித்த பாலன் இயேசுவின் புகழை நாளும் பாடுவோம். நல்ல வழியை பின்பற்றுவோம். கிறிஸ்துவின் ஆசீர் உங்கள் உள்ளங்கள் இல்லங்களில் தங்கி புத்தாண்டு புதுமையில் மனிதம் சிறக்க செயல்படுவோம்!
– A.அற்புதராஜ்
மகளிர் திட்ட பணியாளர்